நெல்லையில் படிக்கட்டு இல்லாமல் இயங்கும் அரசுப் பேருந்து.. நடவடிக்கை எடுக்க கோரிக்கை! - நெல்லையில் படியே இல்லாமல் பேருந்து
Published : Feb 10, 2024, 2:01 PM IST
|Updated : Feb 15, 2024, 7:03 AM IST
திருநெல்வேலி: நாங்குநேரியில் இருந்து மூலைக்கரைப்பட்டி வரை செல்லும் அரசுப் பேருந்தில், தினமும் ஏராளமான மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர். மேலும், நாங்குநேரி சுற்றுவட்டாரம் அதிகமான கிராமப் பகுதி என்பதால், அரசுப் பேருந்துகளை நம்பியே மாணவ மாணவிகள் அருகிலுள்ள நாங்குநேரி மற்றும் மூலைக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி ஆகிய இடங்களில் அமைந்துள்ள பள்ளிகளுக்கு, அரசின் இலவச பஸ் பாஸ் மூலம் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில், மூலைக்கரைப்பட்டியிலிருந்து நாங்குநேரி வரை செல்லும் அரசுப் பேருந்து, மூலைக்கரைப்பட்டி முன்பாக உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றபோது, திடீரென அங்கு பேருந்துக்கு காத்து நின்றவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதன் காரணம், பேருந்தின் பின்பகுதியில் படிக்கட்டுகளே இல்லை. இதனால் முன் வாசல் வழியாகவே மாணவர்களும், பிற பயணிகளும் இறங்கி ஏறினர்.
படியில் பயணம் நொடியில் மரணம் எனக் கூறும் நிலையில், இங்கு பேருந்தில் படியே இல்லாமல் போனால், எங்கே போய் ஏறுவது என மக்கள் குழம்பியுள்ளனர். எனவே, இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.