சாலையில் தாறுமாறாக ஓடிய கார்... நின்றிருந்த பைக்கை தரதரவென இழுத்துச் செல்லும் சிசிடிவி காட்சி! - பென்னாகரம் கார் விபத்து
Published : Mar 2, 2024, 3:14 PM IST
தருமபுரி: தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியில், சாலையில் கார் ஒன்று தாறுமாறாக ஓடி, சாலையின் ஓரத்தில் நின்றிருந்த இருசக்கர வானகத்தில் மோதி, அதை சிறிது தூரம் தரதரவென இழுத்துச் சென்று, அருகே இருந்த கடை வாசலில் உள்ள கம்பத்தில் மோதி நின்றுள்ளது. அதனைத் தொடர்ந்து, அந்த காரை ஓட்டி வந்த நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
தற்போது இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, இந்த விபத்து சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பென்னாகரம் போலீசார், வழக்குப்பதிவு செய்து, காரின் பதிவு எண்ணை வைத்து, காரில் இருந்து தப்பி ஓடியவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கார் பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து நிகழ்ந்ததா அல்லது ஒகேனக்கலுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் வரும்போதோ அல்லது திரும்பிச் செல்லும் போதோ மது போதையில் காரை தாறுமாறாக ஓட்டினார்களா அல்லது விபத்துக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என பல கோணங்களில் பென்னாகரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தின்போது, நல்வாய்ப்பாக அப்பகுதியில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.