காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித் தவித்த 35 பக்தர்கள் பாதுகாப்பாக மீட்பு.. தேனியில் நடந்தது என்ன?
Published : Nov 3, 2024, 7:21 AM IST
தேனி: போடிநாயக்கனூர் அருகே கோயில் வழிபாட்டிற்குச் சென்ற நிலையில், கனமழை காரணமாக காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித் தவித்த 35 பக்தர்களை தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
தேனி, போடிநாயக்கனூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியை ஒட்டியுள்ள உலகுருட்டி பகுதியில் வட மீனாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்நிலையில், இந்த கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக போடிநாயக்கனூரைச் சேர்ந்த 35 நபர்கள் சென்றுள்ளனர். இவர்கள், கோயிலுக்கு சென்று விட்டு திரும்பிய நிலையில், அங்கு பெய்த பலத்த மழை காரணமாக அப்பகுதியில் உள்ள நீரோடையில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியுள்ளது.
இதனால், கோயிலுக்குச் சென்றவர்கள் ஆற்றைக் கடக்க முடியாமல் சிக்கித் தவித்துள்ளனர். இதுகுறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போடிநாயக்கனூர் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு படை வீரர்கள், சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி தவித்த 35 பேரையும் கயிறு கட்டி பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.