15-ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு தினம்.. உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி! - 15th anniversary of Mullivaikal - 15TH ANNIVERSARY OF MULLIVAIKAL
Published : May 18, 2024, 4:14 PM IST
கொழும்பு: இலங்கை முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்ட போரில் உயிரிழந்தவர்களுக்கு 15வது ஆண்டு நினைவு தினம் இன்று (சனிக்கிழமை) அனுசரிக்கப்பட்டது. இதில், சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் ஆக்னஸ் காலமார்ட் பங்கேற்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிராக இறுதிகட்ட போர் நடந்தது. இந்த நேரம், இலங்கையின் அதிபராக கோத்தபய ராஜபக்சே இருந்தார். இந்த போரில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மே 18ஆம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளை, தமிழ் அமைப்புகள் முள்ளிவாய்க்கால் நினைவு தினமாகவும், இனப்படுகொலை நினைவு தினமாகவும் அனுசரித்து வருகின்றனர்.
அதன்படி, 15வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதில், முள்ளிவாய்க்கால் நினைவு ஸ்தூபியில் ஏராளமானோர் கலந்து கொண்டு போரில் உயிரிழந்தவர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில், சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் ஆக்னஸ் காலமார்ட், அரசியல் பிரமுகர்கள், மதகுருமார்கள் என பலரும் கலந்து கொண்டு தங்களது அஞ்சலியை செலுத்தினர்.