விமானப் பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளுக்கு பெரும் பிரச்சினையாக இருப்பது தகவல் தொடர்பு தான். இதை சரிகட்ட முதன்முறையாக ஸ்டார்லிங்க் (Starlink) இன்டர்நெட் இணைப்புடன் போயிங் 777 (Boeing 777) விமானத்தை இயக்க கத்தார் ஏர்வேய்ஸ் (Qatar Airways) திட்டமிட்டுள்ளது.
இதற்கான சோதனை ஓட்டமாக, அக்டோபர் 22 அன்று கத்தார் தலைநகர் தோஹாவிலிருந்து லண்டனுக்கு, கத்தார் ஏர்வேஸின் போயிங் 777 விமானத்தில் ஸ்டார்லிங்க் வைஃபை சோதனை செய்யப்பட்டது. உலகின் முதல் வைஃபை இணைப்புக் கொண்ட போயிங் 777 விமானப் பயணம் இதுவாகும் என கத்தார் ஏர்வேஸ் குறிப்பிட்டிருந்தது.
வீடியோ அழைப்பில் இணைந்த எலான் மஸ்க்:
இது தொடர்பான வீடியோவை கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் தங்களின் யூடியூப் பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறது. அதில், கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தில் தலைமை செயல் அலுவலர் பத்ர் முகமது அல் மீர் (Badr Mohammed Al Meer), அவர்களின் போயிங் 777 விமானத்தில் பயணம் செய்துகொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில், ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனர் எலான் மஸ்க் (Elon Musk) உடன் வீடியோ அழைப்பை மேற்கொள்கிறார். இதில் எலான் மஸ்க் மகிழ்ச்சியுடன் சிலவற்றை பகிர்ந்துகொள்கிறார். முகமது அல் மீர், தங்களால் இதை நம்ப முடியவில்லை எனக் கூறுகிறார். அதற்கு, பதிலளிக்கும் எலான் மஸ்க், இது மென்மேலும் வளர்ந்து கொண்டே தான் இருக்கப் போகிறது எனத் தெரிவிக்கிறார்.