டெல்லி:பண்டிகைக் காலத்தை முன்னிட்டும், பழைய இருப்புகளை காலி செய்யும் நோக்குடனும் தங்கள் பழைய கார்களை ஸ்கிராப் செய்து அல்லது எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களில் வாங்கப்படும் கார்களின் விலையை 1.5 முதல் 3 சதவீதம் வரையிலும் குறைக்க கார் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உடனான ஆலோசனைக்குப் பின்னர், கார் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
மேலும், வணிக வாகன உற்பத்தியாளர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தள்ளுபடியை வழங்க தயாராக இருப்பதாகவும், பயணிகள் வாகன உற்பத்தியாளர்கள் ஒரு வருடத்திற்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தள்ளுபடியை வழங்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
இந்த தள்ளுபடிகள் பழைய வாகனங்களை அகற்றுவதை மேலும் ஊக்குவிக்கும் என்றும், இதன் மூலம் பாதுகாப்பான, தூய்மையான மற்றும் திறமையான வாகனங்களை சாலைகளில் இயக்குவதை உறுதி செய்ய இயலும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் தள்ளுபடி: மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா (Mercedes-Benz India) நிறுவனத்தின் பழைய கார்களை ஸ்கிராப்பிங் செய்துவிட்டு புதிய வாகனம் வாங்கும் நபருக்கு தங்களுடைய புதிய கார்களின் எக்ஸ்-ஷோரூம் விலையிலிருந்து ரூ.25,000 பிளாட் தள்ளுபடியை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது வழங்கப்பட்டுள்ள அனைத்து தள்ளுபடிகளுக்கும் மேலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
பயணிகள் வாகன உற்பத்தியாளர்களின் தள்ளுபடி: கொடுக்கப்பட்டுள்ள அறிக்கையின்படி, பயணிகள் வாகன உற்பத்தியாளர்களான மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் (Maruti Suzuki India Ltd), டாடா மோட்டார்ஸ் (Tata Motors), மஹிந்திரா & மஹிந்திரா (Mahindra & Mahindra), ஹூண்டாய் மோட்டார் இந்தியா (Hyundai Motor India), கியா மோட்டார்ஸ் (Kia Motors), டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (Toyota Kirloskar Motor), ஹோண்டா கார்ஸ் (Honda Cars), ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor), ரெனால்ட் இந்தியா (Renault India), நிசான் இந்தியா (Nissan India) மற்றும் ஸ்கோடா வோக்ஸ்வாகன் இந்தியா (Skoda Volkswagen India) ஆகிய நிறுவனங்கள் தங்களுடைய புதிய கார்களின் எக்ஸ்-ஷோரூம் விலையிலிருந்து 1.5 சதவீதம் தள்ளுபடி அல்லது ரூ.20,000 என இதில் எது குறைவோ அதனை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிக வாகன உற்பத்தியாளர்களின் தள்ளுபடி: அந்த அறிக்கையின்படி, வணிக வாகன உற்பத்தியாளர்களான டாடா மோட்டார்ஸ், வால்வோ ஐஷர் வணிக வாகனங்கள் (Volvo Eicher Commercial Vehicles), அசோக் லேலண்ட் (Ashok Leyland), மஹிந்திரா & மஹிந்திரா, ஃபோர்ஸ் மோட்டார்ஸ் (Force Motors), இசுஸு மோட்டார்ஸ் (Isuzu Motors) மற்றும் எஸ்எம்எல் இசுஸூ (SML Isuzu) ஆகிய நிறுவனங்கள் தங்களுடைய வணிகத்திற்கான புதிய வாகனங்களின் எக்ஸ்-ஷோரூம் விலையில் 3 சதவீதத்திற்குச் சமமான தள்ளுபடியை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மொத்த வாகன எடை (Gross Vehicle Weight) 3.5 டனுக்கு மேல் உள்ள வணிக சரக்கு வாகனத்தை ஸ்கிராப்பிங் செய்துவிட்டு, ஸ்கிராப் செய்யப்பட்ட வணிக வாகனத்தின் டிரேடட் டெபாசிட் சான்றிதழுடன் புதிய வாகனம் வாங்கும் நபருக்கு எக்ஸ்-ஷோரூம் விலையில் 2.75 சதவீதத்திற்கு சமமான தள்ளுபடி வழங்கப்படும் என்றும், பேருந்துகள் மற்றும் வேன்களுக்கும் இந்த திட்டம் பரிசீலிக்கப்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க:Solar Panel-க்கு ரூ.78 ஆயிரம் வரை மானியம்.. TANGEDCO அட்டகாசமான அறிவிப்பு!