கபோரோன்:வைரம் உற்பத்தியில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானா விளங்குகிறது. உலகின் மொத்த வைர உற்பத்தியில் சுமார் 20 சதவீதம் இங்கு உற்பத்தியாகிறது. இந்த நிலையில், போட்ஸ்வானாவில் உள்ள கனடா நாட்டைச் சேர்ந்த லூகாரா டைமண்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு சுரங்கத்திலிருந்து சுமார் 2,492 காரட் வைரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உலகின் இரண்டாவது மிகப்பெரிய வைரம்: 1905-ல் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட 3,106 காரட் 'கலினன் வைரம்' (Cullinan Diamond) உலகின் மிகப்பெரிய வைரமாக உள்ளது. இதனை அடுத்து, தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய வைரமாக 'போட்ஸ்வானா வைரம்' (Botswana Diamond) கருதப்படுகிறது. ஆகவே, இந்த போட்ஸ்வானா வைரமே உலகின் இரண்டாவது மிகப்பெரிய வைரம் என்று லூகாரா டயமண்ட் நிறுவனத்தின் தலைவர் வில்லியம் லாம்ப் அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும், பெரிய அளவுடைய மற்றும் அதிக மதிப்புள்ள வைரங்களை அடையாளம் காணவும், பாதுகாக்கவும் 2017ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மெகா டயமண்ட் ரெக்கவரி (MDR) என்ற நிறுவனத்தின் எக்ஸ்ரே டிரான்ஸ்மிஷன் (XRT) தொழில்நுட்பத்தை பயன்படுத்தியே இந்த 'போட்ஸ்வானா வைரம்' கண்டறியப்பட்டது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எக்ஸ்ரே டிரான்ஸ்மிஷன் தொழில்நுட்பம்:கனடா நாட்டைச் சேர்ந்த லூகாரா டைமண்ட் நிறுவனம் 2012ஆம் ஆண்டில் போட்ஸ்வானாவில் வைர சுரங்கத்தை தொடங்கியது. அதன் பின்னர், 216 வைரங்களை ஒவ்வொன்றும் தலா 1 மில்லியன் டாலருக்கும் அதிகமாகவும், 11க்கும் மேற்பட்ட ஒற்றை வைரங்கள் ஒவ்வொன்றும் தலா 10 மில்லியன் டாலருக்கும் அதிகமாகவும் விற்பனை செய்துள்ளனர்.
அந்த வகையில், 2019ஆம் ஆண்டில் கரோவ் சுரங்கத்தில் லுகாராவால் 1,758 காரட் மதிப்புடைய வைரம் ஒன்று கண்டறியப்பட்டது. இதுவே போட்ஸ்வானாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய முதல் வைரமாகும். அதற்கு 'செவிலோ வைரம்' (Chevilo Diamond) என்று பெயரிடப்பட்டது.