சிங்கப்பூர் சட்ட அகாடமி (SAL) வருங்காலத் தேடலைத் தொடங்கியுள்ளது. அதன்படி, ஜெனரேட்டிவ் ஏஐ தொழில்நுட்பத்தை வழக்கறிஞர்கள் தெரிந்துகொண்டு, வருங்காலத் தொழில்நுட்பங்களுடன் இசைந்து பணியாற்ற புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வழக்கறிஞர்களுக்கு ஜெனரேட்டிவ் ஏஐ பயன்பாடுகளைக் கற்றுத்தர, சிங்கப்பூர் சட்ட அகாடமி, மைக்ரோசாப்ட் நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்நாட்டில் இன்று தொடங்கி இரண்டு நாள்கள் (செப்டம்பர் 11, 12) நடைபெறும் TechLaw.Fest 2024 நிகழ்வில் இந்த ஒப்பந்தம் உறுதிசெய்யப்பட்டது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மைக்ரோசாப்ட் ஆசியாவின் கார்ப்பரேட், வெளியுறவு மற்றும் சட்ட விவகாரங்களுக்கான துணைத் தலைவர் மற்றும் துணை பொது ஆலோசகர் மைக் யே, சிங்கப்பூர் சட்ட அகாடமியின் தலைமை நிர்வாகி யியோங் ஜீ கின் (Yeong Zee Kin) ஆகியோர் கையெழுத்திட்டனர்.
சட்ட வல்லுநர்கள் தங்கள் அன்றாட நடைமுறையில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பின்பற்ற உதவும் பயன்பாடுகள் மற்றும் பயிற்சிகளை வழங்குவதில் இந்த ஒப்பந்தம் கவனம் செலுத்தும். மேலும், சட்ட ஆய்வுகள், பிரச்சினைகளுக்கான தீர்வுகள், வணிக மேம்பாடு போன்ற துறைகளில் GenAI பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதலையும் வழக்கறிஞர்கள் பெறுவார்கள்.
மைக்ரோசாப்ட் மைக் யே, சிங்கப்பூர் சட்ட அகாடமி யியோங் ஜீ கின் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து (Credits: SAL) இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, LLM-களுடன் (Large Language Model) பொறியியலைப் பயன்படுத்துவதற்கான புதிய வழிகாட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வழிகாட்டியானது, வழக்கறிஞர்களுக்கு நிகழ்நேரத்தில் தேவைப்படும் சட்ட அறிவுரைகளை துல்லியமாக வழங்கும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இசைந்து பணியாற்றும்போது, விரைவாக சட்ட சிக்கல்களை களைய முடியும் எனக் இக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
வழிகாட்டிக்கு அப்பால், GenAI குறித்த ஆழமான புரிதலை வழக்கறிஞர்களுக்கு வழங்குவதற்கு சிங்கப்பூர் சட்ட அகாடமி ஒரு அடிப்படை பாடத்திட்டத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த பாடத்திட்டமானது பிராம்ட் பொறியியல் மற்றும் முக்கியமான நெறிமுறைக் கருத்தாய்வு போன்ற திறன்களை உள்ளடக்கியதாக இருக்கும். இந்த பாடத்திட்டத்தின் முதல் அமர்வு விரைவில் அறிவிக்கப்படும் என்று SAL தலைமை நிர்வாகி யியோங் ஜீ கின் தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய மைக்ரோசாப்டின் துணைத் தலைவர் மைக் யே, “சட்டம் உள்பட பெரும்பாலான தொழில்களை செயற்கை நுண்ணறிவு எவ்வாறு மாற்றுகிறது என்பதை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் எடுத்துக்காட்டுகிறது. சட்ட வல்லுநர்கள் போட்டித்தன்மையுடன் இருப்பதற்கு AI திறன்களை வளர்த்துக் கொள்வது முக்கியமானது,” என்று அவர் குறிப்பிட்டார்.