சென்னை:தொழில்நுட்பத்தின் எழுச்சி ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றங்களுக்கு வழிவகுத்துள்ளது. அவற்றுள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ள துறை ஆட்டோமொபைல் துறை என்றே சொல்லலாம். ஓட்டுநர் உள்ள ஆட்டோமேடிக் கார் முதல் தற்போது ஓட்டுநர் இல்லாத தன்னியக்க கார் (ரோபோ டாக்ஸி) என ஆட்டோமொபைல் துறை மிகப்பெரிய வளர்ச்சி பெற்றது.
இந்தியாவில் ஓட்டுநர் இல்லாத தன்னியக்க கார்கள் இன்னும் வரவில்லை என்றாலும் அமெரிக்கா, ஐரோப்பா, சீனா உள்ளிட்ட நாடுகளில் தன்னியக்க கார்களின் வளர்ச்சி அதிகரித்துள்ளன. அதிலும் குறிப்பாக சீனாவில் தன்னியக்க கார்களின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. ஓட்டுநர் இல்லாத தன்னியக்க கார்களின் வளர்ச்சியில் சீனா முன்னணியில் உள்ளது.
அமெரிக்க தொழில் அதிபர்களை முந்தியடிக்கும் நோக்கில் சீனாவின் தொழில் நிறுவனங்கள் பில்லியன் டாலர்களை ஓட்டுநர் இல்லாத தன்னியக்க கார்களை தயாரிக்கும் தொழில்நுட்பத்தில் கொட்டி உள்ளனர். மத்திய சீனாவின் வுஹான் நகரின் பரபரப்பான தெருக்களில் ஓட்டுநர் இல்லாத கார்களின் சோதனை நடைபெற்று வருகிறது. சீன தொழில்நுட்ப நிறுவனமான பைடு, 500 ஒட்டுநர் இல்லாத தன்னியக்க கார்களை கம்ப்யூட்டர் மூலம் கார்கள் இயக்குகின்றன.
பைடு நிறுவனம் ஓட்டுநர் இல்லாத தன்னியக்க கார்களை இயக்க கடந்த 2022ஆம் ஆண்டு உரிமம் பெற்று, முதலில் 5 தன்னியக்க கார்களை 13 சதுர கிலோ மீட்டர் வரை பயணிகளை ஏற்றி சென்றன. தற்போது சீனாவின் வுஹான் நகரில் 3 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கார்கள் இயக்கப்படுவதாக பைடு நிறுவனம் தெரிவித்துள்ளது. பயணிகள் கதவை திறக்க க்யூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் பாதுகாப்புக் காரணங்களுக்காக முன் இருக்கைகள் முடக்கப்பட்டுள்ளன. இது மட்டுமில்லாமல் சாதாரண காரில் 30 நிமிட சவாரிக்கு 64 யுவான் வசூலிக்கப்படுகின்றன நிலையில், ஓட்டுநர் இல்லாத தன்னியக்க காரில் 30 நிமிடத்திற்கு 39 யுவான் (5.43 அமெரிக்க டாலர்) வசூலிக்கப்படுகிறது. அதாவது செலவும் குறைவு. இந்த கார்களில் 5ஜி உதவி தொழில்நுட்பம் மூலம் சவாரிக்கு வலுவான உத்தரவாதங்களும் வழங்கப்படுகிறது.