பென்சகோலா, புளோரிடா: போயிங்கின் ஸ்டார்லைனர் காப்ஸ்யூலில் ஏற்பட்ட தொடர்ச்சியான கோளாறுகளால் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த விண்வெளி ஆய்வாளர்கள் பூமிக்குத் திரும்புவதில் சிக்கல் நீடித்தது. இதனைத்தொடர்ந்து சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏழு மாதங்கள் தங்கியிருந்த ரஷ்ய மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர்களின் குழுவைஸ்பேஸ்-எக்ஸ் (SpaceX) டிராகன் விண்கலம் பூமிக்குக் கொண்டுவந்தது.
நான்கு க்ரூ-8 விண்வெளி வீரர்கள் தரையிறக்கப்பட்டனர். மார்ச் 2024-இல் தொடங்கப்பட்ட க்ரூ-8 மிஷன், நாசா விண்வெளி வீரர்களான மேத்யூ டொமினிக் (Matthew Dominick), மைக்கேல் பாராட் (Michael Barratt), ஜீனெட் எப்ஸ் (Jeanette Epps) மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கிரெபென்கின் (Alexander Grebenkin) ஆகியோரை உள்ளடக்கியது.
இந்த குழு விண்வெளியில் 232 நாள்கள் செலவழித்தது, பூமியை 3,760 முறை சுற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், கிட்டத்தட்ட 100 மில்லியன் மைல்கள் இவர்கள் பயணம் செய்துள்ளனர்.
இவர்கள் வந்த ஸ்பேஸ்-எக்ஸ் விண்கலம் கடலில் விழுந்தவுடன், மீட்புக் குழுக்கள் டிராகன் விண்கலத்தை விரைவாகப் பாதுகாத்து மீட்டனர். அப்படியே க்ரூ-8 உறுப்பினர்களுடன் விண்கலத்தை தங்கள் மீட்புக் கப்பலில் ஏற்றினர். அதன்பிறகு, மீட்பு கப்பலில் பாதுகாப்பாக விண்கலத்தின் உள்ளிருந்த நான்கு பேரையும் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டு மேம்பட்ட சோதனைகளுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.