தார்வாட் (கர்நாடகம்): ஈக்கள் இப்போது விண்வெளிக்கு பறக்கும் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், கர்நாடகா மாநிலம் தார்வாட்டில் உள்ள வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தின் (UAS) உயிரி தொழில்நுட்பத் துறையால் உருவாக்கப்பட்டுள்ள 'டிரோசோபிலா மெலனோகாஸ்டர்' (Drosophila Melanogaster) என்ற அறிவியல் பெயர் கொண்ட பழ ஈக்கள், 2025ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டுள்ள இஸ்ரோவின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'ககனாயன்' (Gaganayaan) திட்டத்தின் பரிசோதனை ஒன்றில் பயன்படுத்தப்பட உள்ளது.
சிறுநீரக கற்கள் என்பது விண்வெளி வீரர்களிடையே பொதுவான உடல்நலப் பிரச்சினையாகும். ஆகவே, விண்வெளி வீரர்களுக்கு ஏற்படும் சிறுநீரக கற்கள் பிரச்சனை குறித்தும், விண்வெளியில் சிறுநீரக கற்கள் உருவாகும்போது மூலக்கூறு வழிமுறைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்தும் ஆய்வு செய்வதற்கு, 15 ஈக்கள் கொண்ட ஒரு தொகுப்பை 'ககனாயன்' விண்கலத்தின் மூலமாக விண்வெளிக்கு அனுப்புவதற்காக திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து யுஏஎஸ் பயோடெக்னாலஜி துறையின் உதவி பேராசிரியர் ரவி குமார் ஹோசாமணி கூறுகையில், "இந்த பரிசோதனையானது, குறிப்பாக இந்திய விண்வெளி வீரர்களுக்கு புதுமையான சிகிச்சைகளை கண்டறிய பயனுள்ளதாக இருக்கும். இதற்காக அனுப்பப்படும் ஈக்கள் உள்ள கிட்களில் ஆக்ஸிஜன் நிரப்பப்பட்டு அதன் உள்ளே ரவை மற்றும் வெல்லம் கலந்த கஞ்சி வடிவில் தயாரிக்கப்பட்ட உணவும் வைக்கப்படும்.