தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / technology

இந்த நாள் அந்த நொடி.. உலகமே உற்றுநோக்கிய சந்திரயான் 3.. தேசிய விண்வெளி தினத்தின் கருப்பொருள் என்ன? - National Space Day 2024

India's 1st National Space Day: இந்தியாவின் பெருமையை விண்ணில் நிலைநாட்டிய சந்திராயன்-3 விண்கலத்தின் சாதனை நிகழ்ந்து 1 ஆண்டு நிறைவு பெற்ற நிலையில், இந்தியர்களின் விஞ்ஞான அறிவை உலகிற்கு எடுத்துச் சொல்லப் போகும் நமது நாட்டின் “முதல் தேசிய விண்வெளி தினம்” நாளை கொண்டாடப்படுகிறது.

நிலவின் தென் துருவத்தில்  தரையிறங்கிய சந்திராயன்-3
நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய சந்திராயன்-3 (Credits- ISRO Official Website)

By ETV Bharat Tech Team

Published : Aug 23, 2024, 7:01 AM IST

ஹைதராபாத்: இந்தியாவுக்கும், நிலவுக்கும் பல பந்தங்கள் உள்ளது எனலாம். குழந்தைக்கு சோறு ஊட்டும் அம்மா முதல் பெயர் எடுத்த கனவு நாயகன் கலாம் வரை அனைவரின் கனவுக்கு வெற்றி இலக்காக இருப்பது நிலவு. அப்படிப்பட்ட இந்தியாவின் கனவுக்கு கைகொடுத்தது சந்திரயன் 3 விண்கலம். நாம் இப்போது இருக்கும் 2024 என்பது கலாமின் கனவு இந்தியா ஆண்டாகும். இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 23) நாம் கொண்டாடும் "தேசிய விண்வெளி தினம்” அந்த கனவை நினைவாக்கிய நாள்.

கடந்த ஆண்டு இந்த நாளில்தான் இந்தியா நிலவில் தரையிறங்கிய நான்காவது நாடு என்ற பெயரைப் பெற்றது. அதைவிட முக்கியமாக, நிலவில் தரையிறங்க கடினமான பகுதியான தென் துருவப் பகுதியில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை தனது ஆக்கியது.

இந்தச் சாதனையைப் போற்றும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 23ஆம் தேதியை "தேசிய விண்வெளி தினமாக" அறிவித்தார். இந்நிலையில், நாட்டின் ஒன்றாவது தேசிய விண்வெளி தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில், விண்வெளித் துறை விரிவான நிகழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அவற்றை இந்த கட்டுரையில் காணலாம்.

தேசிய விண்வெளி தினத்தின் கருப்பொருள் (THEME): இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியதை நினைவுகூறும் வகையில், இந்த ஆண்டு தேசிய விண்வெளி தினத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கருப்பொருள் 'நிலவைத் தொடும்போது உயிர்களைத் தொடுதல்: இந்தியாவின் விண்வெளி சாகா'. இந்த கருப்பொருள் சமூகம் மற்றும் தொழில்நுட்பத்தில் விண்வெளி ஆய்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

இது குறித்து பேசிய விண்வெளி ஆய்வாளர் கிரிஷ் லிங்கண்ணா கூறுகையில், “இந்த கருப்பொருள் வைத்தற்கான காரணம், நமது நாட்டு மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் இந்திய விண்வெளி ஆய்வு பெரிய மாற்றத்தை உண்டாக்கக் கூடியது. நாடு பல போராட்டங்களை தாண்டி இந்த சந்திரயான் 3ஐ விண்ணுக்கு ஏவியது, அதுபோல் மனிதர்களாகிய நாம் பல போராட்டங்களைத் தாண்டி வெற்றியடைய வேண்டும். அதேபோல், உயர்ந்த நிலையில் இருக்கும் சந்திரயானின் வேர் இந்தியா. நமது சாதனைக்கு எல்லையே இல்லை, எனவே எழுந்திரு தோழா என்பதே இந்த கருப்பொருளுக்கான விளக்கமாகும்” என்று கூறினார்.

சாதனை நொடிகளை பின்னோக்கிச் சென்றால்..

சந்திரயான்-1:இந்தியாவின் முதல் நிலவுப் பயணமான சந்திரயான்-1 அக்டோபர் 22, 2008 அன்று ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள SDSC SHAR-இல் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது. பூமியின் சுற்றுப்பாதையில் உள்ள சூழ்ச்சிகள் மற்றும் நிலவை நோக்கி பயணிப்பதற்கான நிலைப்பாட்டைத் தொடர்ந்து, சந்திரயான்-1 நவம்பர் 10 அன்று நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது, அப்போது நிலவின் அருகே சென்ற ஐந்தாவது நாடாக இந்தியா உருவெடுத்தது.

நவம்பர் 14 அன்று நிலவின் தென் துருவத்தில் உள்ள ஷேக்லெட்டன் பள்ளம் அருகே மூன் இம்பாக்ட் ப்ரோப் (எம்ஐபி) என்ற இடத்தை அடைந்தது.​ இந்தப் பணி இரண்டு ஆண்டுகள் நீடிக்கும் என்று கருதப்பட்டது, ஆனால் துரதிஷ்ட விதமாக 28 ஆகஸ்ட், 2009 அன்று ஆர்பிட்டருடனான தொடர்பை இஸ்ரோ இழந்ததையடுத்து, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன.

சந்திரயான்-2:சந்திரயான்-1 தோல்விக்குப் பின் 22 ஜூலை, 2019 அன்று சந்திரயான்-2 LVM3 இல் ஏவப்பட்டது. சுற்றுப்பாதையை உயர்த்தும் சூழ்ச்சிகள் மற்றும் இறுதியாக டிரான்ஸ்-லூனார் பாதையைக் கடந்த சந்திரயான்-2 ஆகஸ்ட் 20 அன்று நிலவின் சுற்றுப்பாதையை அடைந்தது. பின் செப்டம்பர் 6, 2019 அன்று சந்திரயான்-2 லேண்டருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது, அதனால் அந்த ஆய்வுப் பணிக்கான திட்டமும் தோல்வியைத் தழுவியது.

வெற்றி வாகை சூடிய சந்திரயான்-3:சந்திரயான்-3 ஜூலை 14 அன்று வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் ஏவப்பட்டது. அடுத்த நாள், முதல் சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் முறை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. பின் ஆகஸ்ட் 1, 2023 அன்று, Trans Lunar எனப்படும் நிலவை நோக்கிய சுற்றுப் பாதைக்கு வெற்றிகரமாகச் சென்றது. ஆகஸ்ட் 5ஆம் தேதி வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதையை அடைந்தது. ஆகஸ்ட் 17, 2023 அன்று, உந்துவிசை பகுதியிலிருந்து லேண்டர் பகுதி வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 23 அன்று மாலை 6:04 மணிக்கு, சந்திரயான் -3 இன் லேண்டர் தரையிறங்குவதற்கு இலக்காக இருந்த 4.5 கிலோமீட்டர் அகலப் பகுதியின் மையத்தை நெருங்கியது. அந்த இடத்திலிருந்து 300 மீட்டர் (985 அடி) தொலைவில் லேண்டர் தரையிறங்கி, நிலவின் தென் துருவத்தில் முதல் நாடாக இந்தியா தனது கொடியை நாட்டியது.

அதேபோல், அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யாவுக்குப் பிறகு நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கிய நான்காவது நாடாக இந்தியா ஆனது. இந்த விண்வெளி ஆய்வுப் பணியானது 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்றது .

தேசிய விண்வெளி தினம் கொண்டாட்டம் மற்றும் செயல்பாடுகள்:விண்வெளியில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க சாதனைகள், அதன் மூலம் சமூகத்திற்கு ஏற்பட்ட நன்மைகள் மற்றும் அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்திய விண்வெளித் திட்டத்தில் ஈடுபடுவதற்கான எல்லையற்ற வாய்ப்புகளை எடுத்துக்காட்டும் வகையில் இந்த கொண்டாட்டங்கள் அமைய உள்ளன.

இந்தியாவின் விண்வெளி சாதனைகள் தொடர்பான பல்வேறு முக்கிய அமர்வுகள், ஈர்க்கும் கண்காட்சிகள் மற்றும் முக்கிய அறிவிப்புகளை உள்ளடக்கிய தேசிய விண்வெளி தினத்தைக் கொண்டாடுவதற்காக தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இரண்டு நாள் சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்று, ஆகஸ்ட் 23 அன்று நிறைவுபெற உள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:60 நாட்களுக்கும் மேலாக விண்வெளியில் தவிக்கும் வீரர்களின் மனநிலை எப்படி இருக்கும்? நாசா கூறுவது என்ன?

ABOUT THE AUTHOR

...view details