சென்னை:பொறியியல் மற்றும் அறிவியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் திருவிழாவையும், சென்னை ஐஐடியின் ஆய்வகங்களையும் மாணவர்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
சென்னை ஐஐடியில் ஆண்டுதோறும் நடைபெறும் வருடாந்திர சாஸ்த்ரா எனப்படும் தொழில்நுட்ப திருவிழா இன்று முதல் 7ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. சாஸ்த்ரா திருவிழாவின் 26-வது கண்காட்சியை சென்னை ஐஐடி இயக்குனர் காமகாேடி திறந்து வைத்து பார்வையிட்டார்.
பள்ளி மாணவர்கள் வருகை:பின்னர் ஈடிவி பாரத் தமிழ்நாடுவுக்கு பேட்டியளித்த சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி, "சென்னை ஐஐடியில் மாணவர்களின் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தும் சாஸ்த்ரா தொழில்நுட்ப திருவிழாவில் 80க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகள் இடம் பெற்றுள்ளன. அனைவருக்கும் ஐஐடி என்ற திட்டத்தின் கீழ் 18 துறைகளின் ஆய்வகங்களையும் மாணவர்கள் பார்வையிடவும், அதில் உள்ள வசதிகளை தெரிந்துக் காெள்ளவும் ஏற்பாடு செய்துள்ளோம்.
உயர்கல்வியில் உள்ள படிப்புகள் குறித்தும் எடுத்து கூறுகிறோம். ஒபன்ஹவுஸ் மூலம் சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் பார்வையிட வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். அதிலும் பள்ளி மாணவர்கள் கிராமப்புறங்களிலும் இருந்தும் வந்துள்ளனர்.முதல்முறையாக நீல கடல் பொருளாத்தாரத்தை மேம்படுத்தும் வகையில் சென்னையில் உள்ள தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம் அரங்கினை அமைத்துள்ளது. கடல்சார்ந்த படிப்புகளும், வேலை வாய்ப்பும் அதிகளவில் உள்ளது. இதற்கு அதிகளவில் தொழில்நுட்ப சார்ந்த அறிவும் தேவைப்படுகிறது. இதற்கு பயிற்சி பெற்ற பணியார்களும் இல்லாமல் உள்ளனர். சென்னை ஐஐடியிலும் கடல்சார்ந்த எம்பிஏ படிப்பினை வழங்கி வருகிறோம். வேதியியல் படித்தவர்களுக்கு அதிகளவில் வேலை வாய்ப்பும் இருக்கிறது. மாணவர்கள் சென்னை ஐஐடியில் உள்ள படிப்புகளை தெரிந்து கொள்ள வேண்டும்.
நேரடி செயல் விளக்கங்கள்: செயற்கை நுண்ணறிவை விரைந்து ஒருங்கிணைத்தல், மிகப்பெரிய தரவுப் பகுப்பாய்வு, ரோபாடிக்ஸ் போன்றவை தொழில்துறை புரட்சியில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து விவாதிக்கப்படும். ஸ்மார்ட் மேனுபேக்சரிங் என்பது குறித்த கருத்தரங்கும், நகர்ப்புற திட்டமிடல், நிலைத்தன்மை, ஆற்றல், மேம்பட்ட தொழில்நுட்பங்கள், பேனல்கள், நேரடி செயல் விளக்கங்கள், ஐஐடி ஆராய்ச்சிப் பூங்காவின் ஸ்டார்ட்அப்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும். ஆய்வக சுற்றுப்பயணங்கள், உலகளாவிய நிபுணர் நுண்ணறிவு, தொழில்துறை தலைவர்களுடன் நெட்வொர்க்கிங் வாய்ப்புகள் ஆகியவை சிறப்பம்சங்களாக இடம்பெறுகிறது,"என கூறினார்.
130 அரங்குகள்:சென்னை ஐஐடியில் உள்ள ஆய்வக வசதிகள் உள்ளிட்டவற்றை மாணவர்கள் தெரிந்துக் கொள்ளும் வகையிலும் அனைவருக்கும் ஐஐடி என்ற திட்டத்தின் கீழ் ஐஐடி ஒபன் ஹவுஸ் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இதில் ஐஐடியில் உள்ள துறைகளின் ஆய்வகங்களை மாணவர்கள் நேரடியாக கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து மட்டும் இன்றி ஆந்திரா, கேரளா போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் மாணவர்கள் ஆர்வமுடன் வந்துள்ளனர். பள்ளிகளில் இருந்து அதிகளவில் மாணவர்கள் வருகைப்புரிந்து சென்னை ஐஐடியின் உள்ள படிப்புகளையும், அதன் மூலம் கிடைக்கும் வாய்ப்புகளையும் ஆர்வமுடன் கேட்டறிந்தனர்.
சென்னை ஐஐடி சாஸ்த்ரா திருவிழாவில் 130 அரங்குகளில் 80க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளும், உயர்கல்விப் படிப்பிற்கான வாய்ப்புகளும் இடம் பெற்றுள்ளன.முதல்முறையாக தேசிய கடல் தொழில்நுட்பக் கழகத்தின் கண்டுபிடிப்புகள் இடம் பெற்றுள்ளன. சென்னை ஐஐடி மாணவர்களின் கண்டுப்பிடிப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. உள்நாட்டு உற்பத்தின் கீழ் சென்னை ஐஐடி மாணவர்ககள் உருவாக்கிய ஸ்கேன் இயந்திரம், சிவில் மாணவர்களின் கார்பன் குறைவான கான்கிரீட் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறுத் தொழில்நுட்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
கான்கிரிட் சாலை:சென்னை ஐஐடியின் சிவில் பிரிவில் படிக்கும் ஆராய்ச்சி மாணவி பிபினா, "கட்டுமானப்பணிகளில் தற்பொழுது கார்ப்பன் குறைப்பதற்காக பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறோம். குறிப்பாக கழிவுப்பொருட்களை பயன்படுத்தி கட்டுமானத்திற்கான பொருட்களை செய்து வருகிறோம். சிமெண்ட் சாலை காரணமாக மழைநீர் நிலத்திற்குள் செல்லாமல் சாலையில் வழிந்து ஒடுகிறது. இதனை மாற்றி மழைநீர் நிலத்திற்குள் செல்லும் வகையில் கான்கிரிட் சாலை அமைக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளோம். இதனை நடைபாதைகளில் போட்டால் மழைநீர் நேராக நிலத்திற்குள் செல்லும். நிலத்தடி நீர்மட்டமும் உயரும்,"என தெரிவித்தார்.
சென்னை ஐஐடி மாணவர்கள் கண்டுபிடித்துள்ள ஸ்கேன் இயந்திரம் முற்றிலும் இந்திய தொழில் நுட்பத்தில் வடிவமைக்கப் பட்டுள்ளது. நமக்கு தேவையான வகையில் ஸ்கேன் இயந்திரத்தில் புராேகிராம் செய்து குறைந்த செலவில் ஸ்கேன் எடுக்க முடியும். இந்த இயந்திரம் சந்தைக்கு வருவதற்கு சில ஆண்டுகள் ஆகும் என மாணவர்கள் தெரிவித்தனர். கண்காட்சியை பார்வையிட்ட மாணவர்கள் தங்களுக்கு மிகுந்த பயனுள்ளதாகவும், உயர்கல்விக்கான ஆலோசனைகளை பெறும் வகையில் அமைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தனர்.