சென்னை: மழை, வெயில் போன்ற பருவ காலங்களின் போது, செய்திகளிலோ அல்லது சமூக ஊடகங்களிலோ நாம் அடிக்கடி கேட்கும், படிக்கும் வார்த்தைகளில் ஒன்றாக இருப்பது அலர்ட் என்பதாகும். அலர்ட் என்பது எச்சரிக்கை உணர்வைத் தூண்டும் ஒரு குறியீட்டுச் சொல்லாக கருதப்படுகிறது. அதாவது, வானிலை நிலைகளில் ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டால், அதை மக்களிடம் தெரிவிக்க இந்த அலர்ட் முறையை வானிலை ஆய்வு மையம் பயன்படுத்துகிறது.
பொதுவாக, பருவ காலங்களில் அலர்ட்கள் குறித்த அறிவிப்புகளை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது வெளியிடும்போது, வானிலை மாற்றங்கள் மற்றும் அவற்றின் தீவிரம் குறித்து மக்களுக்கு தெரிவிக்க நிறத்தின் அடிப்படையில் எச்சரிக்கைகள் வெளியிடப்படும். அவை பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகிய வண்ணங்களில் குறியீடாக பயன்படுத்தி, அதன் தீவிரத்தை மக்களுக்கு உணர்த்தப்படுகிறது.
பச்சை அலர்ட் என்றால் என்ன? கனமழை மற்றும் பனிப்பொழிவுகாலங்களில் ஒரு மணி நேரத்திற்கு 70 மில்லி மீட்டர் எனும் அளவில் பெய்யும் மழை மற்றும் பனிப்பொழிவு பச்சை நிறத்தில் அடையாளப்படுத்தப்படுகிறது. இந்த மழை சாதாரணமானதாக (No Heavy Rainfall) எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதனால் எவ்விதப் பாதிப்பும் இல்லை.
இடி மழை, திடீர் புயல் மற்றும் ஆலங்கட்டி மழை போன்ற இடர்பாடுகள் ஏற்படும் நேரங்களில் இடி முழக்கம் எதுவுமில்லாமல் வீசக்கூடிய காற்று (No Thunderstorm) பச்சை நிறத்தில் அடையாளப்படுத்தப்படுகிறது. ஆகவே, பச்சை அலர்ட் வந்தால் மக்கள் பயப்பட வேண்டிய தேவை இல்லை. ஏதாவது எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டால் மட்டுமே இந்த பச்சை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுவிக்கும். இதற்கு எந்த விதமான ஆலோசனையும் வழங்க வேண்டிய அவசியமில்லை.
மஞ்சள் அலர்ட் என்றால் என்ன? மோசமான வானிலையை இந்த மஞ்சள் எச்சரிக்கை குறிக்கிறது. வானிலை ஆய்வு மையம் இந்த மஞ்சள் எச்சரிக்கை கொடுத்தால் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதனால் அன்றாட வாழ்க்கை கூட பாதிக்கப்படலாம்.
கனமழை மற்றும் பனிப்பொழிவுகாலங்களில் 24 மணி நேரத்திற்கு 64.5 மில்லி மீட்டர் முதல் 115.5 மில்லி மீட்டர் வரை பெய்யும் மழை மற்றும் பனிப்பொழிவு மஞ்சள் நிறத்தில் அடையாளப்படுத்தப்படுகிறது. இந்த மழையினை கனமழை (Heavy Rainfall) என்கின்றனர். இம்மழையினால் ஒரு சில பாதிப்புகள் ஏற்பட்டாலும், பெருமளவிலான பாதிப்புகள் இருக்காது என்று அறிந்து கொள்ளலாம்.
இடி மழை, திடீர் புயல் மற்றும் ஆலங்கட்டி மழை போன்ற இடர்பாடுகள் ஏற்படும் நேரங்களில் அதிகபட்ச மேற்பரப்பு காற்றின் வேகம் மணிக்கு 40 கிலோ மீட்டருக்கும் குறைவான நிலையில், காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை இருந்தால் லேசான இடியுடன் கூடிய கனமழை (Light Thunderstorm) என்று மஞ்சள் நிறத்தில் அடையாளப்படுத்தப்படுகிறது. இந்த லேசான இடியுடன் கூடிய மழையினால் ஒரு சில பாதிப்புகள் ஏற்பட்டாலும், பெருமளவிலான பாதிப்புகள் இருக்காது.
ஆரஞ்சு அலர்ட் என்றால் என்ன? கனமழை மற்றும் பனிப்பொழிவுகாலங்களில் 24 மணி நேரத்திற்கு 115.6 மில்லி மீட்டர் முதல் 204.4 மில்லி மீட்டர் வரை பெய்யும் மழை மற்றும் பனிப்பொழிவு ஆரஞ்சு நிறத்தில் அடையாளப்படுத்தப்படுகிறது. இந்த மழையினை மிகக் கனமழை (Very Heavy Rainfall) என்று வகைப்படுத்தப்படுகிறது. இந்த கனமழையினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடிய வாய்ப்பிருக்கிறது என்று ஆரஞ்சு அலர்ட் மூலமாக அறிந்து கொள்ளலாம். எனவே, எச்சரிக்கையுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.