சென்னை: பொதுவாக ஒரு மனிதரில் இருந்து மற்றொரு மனிதனை வேறுபடுத்தி காட்டுவது அர்களது உடல் வேறுபாடுகள், முக சாயல், கை விரல் ரேகைகள் ஆகியவை. ஒரு மனிதனின் ரேகை மற்றொருவருடன் இருந்து மாறுபட்டு இருக்கும். இதனை பயன்படுத்தி பல தொழில் நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நம் ஸ்மார்ட் போன்களை திறப்பதற்கு, லாக்கர்களை திறப்பதற்கு, ரேஷன் கடைகளில் தொடங்கி வங்கிகள் உள்ளிட்ட பல நிறுவனங்களில் கூட பாதுகாப்பிற்காக விரல் ரேகைகள் மூலம் அடையாளம் காணும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சென்னை ஐஐடியில் பயன்பாட்டு இயக்கவியல் மற்றும் உயிரியல் மருத்துவ பொறியியல் துறையில் ஆராய்ச்சி மாணவராக இருந்து வரும் முகேஷ் என்பவர் மனித மூச்சுக் காற்றிலும் இது போன்ற தனித்துவ அடையாளத்தை உருவாக்க முடியும் என்கிறார். இந்த புதிய கண்டுபிடிப்பு மருத்துவத்துறையிலும் மிகுந்த உதவியாக இருக்கும் என கூறியுள்ளனர்.
இந்த தொழில்நுட்பத்தை பயன்பாட்டு ரீதியாக உருவாக்கும் போது, மனிதன் விடும் மூச்சுக் காற்றின் தரவுகளின் அடிப்படையில், செல்போன்களை அன்லாக் செய்வது, கதவுகளை திறப்பது உள்ளிட்ட பயோமெட்ரிக் பயன்பாடுகளுக்கு இந்த புதிய கண்டுபிடிப்பை பயன்படுத்தலாம் என அவர் கூறுகிறார்.
இது குறித்து ஐஐடியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் தொடர்புத் துறையின் முதல்வரும், அப்ளைடு மெக்கானிஸ் துறையின் பேராசிரியருமான மகேஷ் பஞ்சக்னுலா கூறுகையில், “மனிதன் சுவாசிக்கும் போது நுரையீரலில் இருந்து எக்ஸ்ட்ரா டோராசிக் ஜாமெட்ரி என்பதன் வழியாக (extrathoracic geometry) காற்று வெளியேறும். இந்த எக்ஸ்ட்ரா டோராசிக் ஜாமெட்ரியில் ஒவ்வொரு மனிதனுக்கும் சின்ன சின்ன வித்தியாசங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதில் இருந்து வரக்கூடிய காற்றில் வேக ஏற்ற இறக்கங்கள் (velocity fluctuations) இருக்கும்.