தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / technology

வெற்றிகரமாக புவி வட்டப்பாதையை அடைந்த 'EOS 08' - செயற்கைக்கோளின் பயன்பாடுகள் என்ன? - sslv rocket launch - SSLV ROCKET LAUNCH

sslv rocket launch: எஸ்எஸ்எல்வி டி3 ராக்கெட் மூலம் இ.ஓ.எஸ் 08 (EOS 08) செயற்கைக்கோள் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

எஸ்எஸ்எல்வி டி3 ராக்கெட் புகைப்படம்
எஸ்எஸ்எல்வி டி3 ராக்கெட் புகைப்படம் (Credit - ISRO)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 16, 2024, 12:24 PM IST

சென்னை: புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் இஒஎஸ்-08 உடன் எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தபட்டது. அதனைத் தொடர்ந்து திட்டமிட்டபடி செயற்கைகோள் புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

இஸ்ரோ, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்தும் திட்டத்தில் மனிதர்கள் இல்லாமல் அனுப்பும் பணியில் இறுதி கட்ட ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. வானிலை ஆராய்ச்சி, புவி கண்காணிப்பு ஆகிய பணிகளுக்காக செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது.

இந்த நிலையில் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான இஒஎஸ்-08 (ESO 08) செயற்கைக்கோளை எஸ்எஸ்எல்வி-டி3 என்ற சிறிய செயற்கைக்கோள் ஏவுதள வாகனம் மூலம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது. அதை தொடர்ந்து செயற்கைக்கோள் தயாரிக்கப்பட்டு எஸ்எஸ்எல்வி ராக்கெட்டுடன் செயற்கைக்கோள்களை பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட அனைத்து ஆயத்த பணிகளும் முடிக்கப்பட்டு விண்ணில் செலுத்துவதற்கு தயார் நிலையில் வைத்து,
ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த ராக்கெட் ஏவுதலுக்கான 6 மணி நேர கவுன்டவுன் இன்று அதிகாலை 3.17 மணிக்கு தொடங்கியது.

ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 9.17 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. திட்டத்ததின் முதன்மை செயற்கைக்கோளான 32 மீட்டர் உயரம், 175 கிலோ எடை கொண்ட இஓஎஸ் -08 செயற்கைகோள் ராக்கெட் ஏவப்பட்ட 13 நிமிடம் 30 விநாடிகளில் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து அடுத்த 3வது நிமிடத்தில் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் எஸ்ஆர் டெமோசாட் என்ற 200 கிராம் எடைகொண்ட சிறிய சோதனை செயற்கைகோளும் நிலை நிறுத்தப்பட்டது. இந்த இரண்டு செயற்கைகோள்களும் பூமியில் இருந்து 475 கி.மீ. தொலைவில் உள்ள புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

இஓஎஸ்- 08 செயற்கைக்கோளில் எலக்ட்ரோ ஆப்டிகல் இன்பராரெட் பேலோடு (இஓஐஆர்), குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்-ரிபிளக்டோமெட்ரி பேலோட் (ஜஎன்எஸ்எஸ்-ஆர்) மற்றும் எஸ்ஐசி யுவி டோசிமீட்டர் ஆகிய ஆய்வு கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த கருவிகளின் செயல்படுத்தப்படும் திறன் ஒரு ஆண்டாகும். செயற்கைகோளில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

செயற்கைக்கோளின் ஆய்வு என்ன?இஒஐஆர் கருவி, செயற்கைக்கோள் அடிப்படையிலான கண்காணிப்பு, பேரிடர் கண்காணிப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, இரவும் பகலும், மிட்-வேவ் ஐஆர் (எம்ஐஆர்) மற்றும் லாங்-வேவ் ஐஆர் (எல்விஐஆர்) பேண்டுகளில் படங்களை எடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. எரிமலை செயல்பாடு கண்காணிப்பு மற்றும் தொழில்துறை மற்றும் மின் நிலைய பேரிடர் கண்காணிப்பு ஆகியவை இந்த கருவியின் செயல்பாடாகும்.

ஜஎன்எஸ்எஸ்-ஆர் கருவி கடல் பரப்பு காற்று, நில ஈரப்பதம், இமயமலை பகுதிகளில் பணிப்பொழிவு, வெள்ள தடுப்பு ஆகியவை கண்காணிக்க தரவுகள் சேமிக்கப்படும். இவை தவிர மிக முக்கியமாக எஸ்ஐசி யுவி டோசிமீட்டர் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு பயன்படவுள்ளது. ககன்யான் திட்டத்தில் விண்வெளி வீரர்கள் இருக்கும் இடமான குரு மாட்யூலில் பகுதியில் சூரிய ஒளி வெப்ப கதிர்களை கண்காணிக்கவும் சென்சாராக பயன்படுத்தப்படவுள்ளது.

செயற்கைக்கோளுக்கு ஏற்ப ஆராய்ச்சி கருவிகளை உருவாக்குவது மற்றும் எதிர்காலத்தில் செயல்படும் செயற்கைக்கோள்களுக்கு தேவையான புதிய தொழில்நுட்பங்களை இணைப்பது, கணிப்பொறி தொழில்நுட்பங்களுடன் நுண் செயற்கைக்கோள்களை வடிவமைப்பது மற்றும் உருவாக்குவது ஆகியவை இந்த இஓஎஸ்-8 செயற்கைகோளின் முதன்மை நோக்கம். செயற்கைகோள்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட பின் விஞ்ஞானிகள் கரகோஷங்களை எழுப்பியும், ஒருவருக்கொருவர் கைகொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தொடர்ந்து பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், "திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது, திட்ட இயக்குநர் உட்பட அனைத்து விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துகள்" என்று கூறினார்.

இதையும் படிங்க:Google Pixel 9 Series மொபைலில் இவ்வளவு சிறப்பம்சங்களா? விலை என்ன? முழு விவரம்!

ABOUT THE AUTHOR

...view details