பெங்களூரு: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், கடந்த ஆண்டின் இறுதியில் நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக சந்திராயன் 3 விண்கலத்தையும், அதனையடுத்து சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலத்தையும் வெற்றிகரமாக நிலைநிறுத்தி சாதனை படைத்தது. 2024ஆம் ஆண்டின் முதல் நாளான ஜன.1ஆம் தேதி விண்வெளியில் கருந்துளை ஆய்வுக்கான எக்ஸ்போசாட் உடன், பி.எஸ்.எல்.வி சி-58 (PSLV-C58) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
இதனைத் தொடர்ந்து, தற்போது விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வானிலை ஆய்வுக்காக இன்சாட் 3டிஎஸ் செயற்கைக்கோள் வரும் பிப்.17ஆம் தேதி அன்று அனுப்பப்பட உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து, இன்சாட் 3டிஎஸ் செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி எஃப் - 14 என்ற ராக்கெட், வரும் பிப்ரவரி 17ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இஸ்ரோவின் ஜியோசின்க்ரோனஸ் சாட்டிலைட் லாஞ்ச் வெஹிக்கிளின் (GSLV) 16வது விண்கலம் என்பது குறிப்பிடத்தக்கது. புவிசார் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படும் இந்த செயற்கைக்கோள், பூமியின் பருவநிலை மாறுபாடுகள், நிலம் மற்றும் கடல் பரப்புகள் போன்றவற்றை கண்காணித்து, வானிலைக்கான தகவல்கள், அதாவது வானிலை முன்னறிவிப்புகள், பேரிடர் எச்சரிக்கை போன்றவற்றை துல்லியமாக வழங்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.