ஐபோனில் ஒரு ஆபாச செயலி அறிமுகமாகியிருப்பது ஆப்பிள் நிறுவனத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய டிஜிட்டல் கொள்கையே இதற்குக் காரணம் என்றும், இதன் மூலம் நுகர்வோர் நம்பிக்கை கேள்விக்குறியாகியுள்ளது என்றும் ஆப்பிள் குற்றஞ்சாட்டியுள்ளது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், பாதுகாப்புக் கவலைகள் எழுந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் தனது ஆப் ஸ்டோரின் மீது கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டிருந்தது. எந்தெந்த செயலிகள் பயனர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதை அவர்களே தீர்மானித்து வந்தனர். ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சந்தைகள் சட்டம் (DMA) காரணமாக, ஆப்பிளின் அதிகாரம் குறைந்துள்ளது. இதன் காரணமாக தற்போது மூன்றாம் தரப்பு ஆப் ஸ்டோர்களை அனுமதிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
ஆபாச செயலி
ஆப்பிள் ஆப் ஸ்டோர் 2008-ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வருவது. இந்த மாற்றத்தின் விளைவாக, ஆல்ட் ஸ்டோர் (AltStore) என்ற மூன்றாம் தரப்பு ஆப் ஸ்டோர் (Third Party App Store) வாயிலாக "ஹாட் டப்" (Hot Tub) என்ற ஆபாச செயலி ஐபோன் பயனர்களுக்குக் கிடைக்கிறது. இந்த செயலி, "பெரியவர்களுக்கான உள்ளடக்கத்தை ரகசியமாகவும், பாதுகாப்பாகவும், நேர்த்தியாகவும் பார்வையிடுவதற்கான வழி" என்று தன்னை விவரித்து கொண்டுள்ளது.
ஆப்பிள் அல்லாத பிற ஆப் ஸ்டோர்களில் உள்ள செயலிகள், ஆப்பிள் நிறுவனத்தால் ஆரம்பகட்ட தணிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றன. சைபர் பாதுகாப்பு அம்சங்கள் மட்டுமே இதில் சரிபார்க்கப்படுகின்றன. செயலியின் உள்ளடக்கம் குறித்து எந்த மதிப்பீடும் செய்யப்படுவதில்லை. இந்த நேரத்தில் ஆல்ட்ஸ்டோர் நிறுவனம், ஹாட் டப் செயலியை "உலகின் முதல் ஆப்பிள் அங்கீகரிக்கப்பட்ட ஆபாச செயலி" என்று விளம்பரப்படுத்தியது.
இந்த விளம்பரம் ஆப்பிள் நிறுவனத்திற்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதை தடுப்பதற்கான எந்த கதவுகளும் ஆப்பிள் வசம் இல்லை. ஏனென்றால், தடுப்பை ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சட்டங்கள் அடித்து தவிடுபொடியாக்கியுள்ளது. ஆப்பிள் நிறுவனர் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ், ஐபோனில் இருந்து ஆபாசத்தை தள்ளி வைப்பது தங்களில் தார்மீகப் பொறுப்பு என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.