இந்திய தொழில்நுட்பக் கழகம், பல புதுமையான கண்டுபிடிப்புகளுக்குப் பெயர் பெற்றதாகும். இந்த சூழலில், மக்கள் அதிகளவு உணவு சார்ந்த பிரச்சினைகளுக்கு ஆளாவதால், அதற்கு தீர்வாக இ-நோஸ் (E-Nose) எனும் கேட்ஜெட்டைக் கண்டுபிடித்துள்ளனர். இ-நோஸ் என்றால் மின்னணு மூக்கு என்றப் பொருளைக் குறிப்பதாகும்.
பண்டிகைக் காலங்களில் இதுபோன்ற கேட்ஜெட்டுகள் அவசியம் தேவை என்பதை ஐஐடி கான்பூர் சோதனைகள் உணர்த்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஐஐடி கண்டுபிடித்த இந்த இ-நோஸ் உதவியுடன், நெய், எண்ணெய், மசாலாப் பொருள்கள் போன்று நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருள்களில் உள்ள கலப்படத்தை 10 நொடிகளில் கண்டுபிடித்து விடலாம் என்கிறது இதனை தயாரித்த ஆய்வாளர்கள் குழு.
உணவு பாதுகாப்பில் புரட்சி:
ஐஐடி கான்பூரின் நிறுவனமான இ-ஸ்னிஃப் பிரைவேட் லிமிடெட் (E-Sniff Private Limited) இந்த எலக்ட்ரானிக் நோஸ் (இ-நோஸ்) கேட்ஜெட்டை உருவாக்கியுள்ளது. இதன் நிறுவனரும், ஐஐடி கான்பூரின் முன்னாள் மாணவருமான பிரதீப் திவேதி, “இ-நோஸ் கேட்ஜெட்டிற்கு ஐஐடி கான்பூர், ஐஐடி மெட்ராஸ், வாரனாசி ஐஐடி மற்றும் மின்னணு அமைச்சகத்தால் முழுமையாக சான்றளிக்கப்பட்டுள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “முன்னதாக இந்த கேட்ஜெட் மின்னணு அமைச்சகத்தால் சிறந்த ஸ்டார்ட்அப் பிரிவில் 'சுனாட்டி 8.0' (Chunauti 8.0) திட்டத்தில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த புதிய கண்டுபிடிப்புக்காக இந்த ஸ்டார்ட்-அப் நிறுவனத்திற்கு அமைச்சகத்திடம் இருந்து ரூ.25 லட்சம் மானியம் கிடைத்தது. இந்த கேட்ஜெட் உணவு துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும்,” என்று அவர் கூறியுள்ளார்.