டெல்லி :கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 2 ஆயிரத்து 200 போலி கடன் செயலிகளை இடைநீக்கம் அல்லது நிரந்தரமாக நீக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்ற கூட்டத்தில் தெரிவித்து உள்ளது.
இந்த நடவடிக்கை கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரையிலான இடைப்பட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பக்வத் கே காரத் எழுத்துப்பூர்வ கடிதம் வாயிலாக மாநிலங்களவையில் தெரிவித்து உள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் நிதி கட்டுப்பாட்டு இயக்குநரகங்களின் பரிந்துரையின் படி நாட்டின் போலி கடன் செயலிகளின் பெருக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக மத்திய நிதி இணை அமைச்சர் தெரிவித்து உள்ளார். மத்திய மின்னணுவியல் மற்றும் மென்பொருள் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையின் படி கடந்த 2021 ஏப்ரல் முதல் 2022 ஜூலை வரையிலான காலக் கட்டத்தில் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து ஏறத்தாழ 3 ஆயிரத்து 500 முதல் 4 ஆயிரம் வரையிலான கடன் செயலிகள் இடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாகவும், 2 ஆயிரத்து 500 கடன் செயலிகள் முற்றிலுமாக நீக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், கடந்த 2022 ஆகஸ்ட் முதல் 2023 ஆகஸ்ட் இடைப்பட்ட காலத்தில் 2 ஆயிரத்து 200 போலி கடன் செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து முற்றிலும் நீக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க :மத்திய பிரதேசத்தில் பற்றி எரியும் பட்டாசு ஆலை; 11 பேர் உயிரிழப்பு - பிரதமர் நிவாரணம் அறிவிப்பு!