ஐதராபாத் : கூகுள் நிறுவனம், இஸ்ரேல் அரசு மற்றும் ராணுவம் இடையிலான கிளவுட் கம்ப்யூட்டிங் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட 28 ஊழியர்களை பணி நீக்கம் செய்த கூகுள் நிறுவனம், இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு இங்கு இடமில்லை என்றும், அவற்றை நிறுவனம் ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது என்றும் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் அரசு மற்றும் அந்நாட்டு ராணுவத்துடன் மேற்கொண்ட ப்ராஜக்ட் நிம்பஸ் என்று அழைக்கப்படும் ஒப்பந்தத்தை எதிர்த்து 28 ஊழியர்கள், நியூயார்க் மற்றும் சன்னிவேல் அலுவலங்களில் சுமார் 10 மணி நேரத்துக்கும் மேலாக உள்ளிருப்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கூகுள் கிளவுட் தலைமை செயல் அதிகாரி தாமஸ் குரியனின் அலுவலகத்தை விட்டு அகல மறுத்து ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கூகுள் நிறுவனம் போராட்டம் நடத்திய 28 ஊழியர்களையும் பணி நீக்கம் செய்து உள்ளதாக தெரிவித்து உள்ளது. கூகுள் நிறுவனத்தின் சர்வதேச பாதுகாப்பு தலைவர் க்றிஸ் ராக்கோ வெளியிட்டுள்ள அறிவிப்பில், இது போன்ற நடவடிக்கைகளுக்கு இங்கு இடமில்லை என்றும், இவற்றை கூகுள் பொறுத்துக் கொள்ளாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் இது தொடர்பாக அடுத்த கட்ட விசாரணை மேற்கொண்டு வருவதாக கூகுள் நிறுவனம் கூறி உள்ளது. அதேநேரம் கூகுளின் இந்த நடவடிக்கையை அப்பட்டமான பழிவாங்கும் செயல் என்று போராட்டம் நடத்திய ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் தங்களது உழைப்பின் மீதான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவிக்க கூகுள் ஊழியர்களுக்கு உரிமை உண்டு என்றும் பணியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க :விவிபாட், வாக்குப்பதிவு இயந்திர வழக்கு: "தேர்தல் சுதந்திரமாகவும், நியமாகவும் நடப்பதை உறுதி செய்க" - உச்ச நீதிமன்றம்! - Lok Sabha Election 2024