தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / technology

கடலின் ஆழத்தில் ஒளிந்திருக்கும் கனிமத் தங்கம் - சாதித்து காட்டிய NIOT ஆய்வாளர்கள்! - NIOT DEEP SEA RESEARCH

தென் இந்தியப் பெருங்கடலின் சுமார் 15,000 அடி ஆழத்தில் புதைந்திருக்கும் கனிமவள படிமத்தை இந்திய ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதில் பெரும் மதிப்புடைய கனிமங்கள் இருக்க வாய்ப்புள்ளதாக NIOT ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆழ்கடலில் எடுக்கப்பட்ட கனிமங்களின் புகைப்படம்
ஆழ்கடலில் எடுக்கப்பட்ட கனிமங்களின் புகைப்படம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 2, 2025, 5:41 PM IST

சென்னை: தென் இந்தியப் பெருங்கடலின் ஆழமான பகுதியில், கடல் தளத்திலிருந்து 4500 மீட்டர் (சுமார் 15,000 அடி) கீழே, மிகவும் மதிப்புமிக்க கனிம வளங்கள் நிறைந்த "ஹைட்ரோதெர்மல் சல்பைடு" (Hydrothermal Sulphide) படிமங்களை இந்திய ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வரலாற்று சிறப்புமிக்க கண்டுபிடிப்பு, இந்தியாவின் கடல் ஆராய்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

முதலில் ஹைட்ரோதெர்மல் சல்பைடு என்றான் என்ன என்பதை அறியும் முன், ஹைட்ரோதெர்மல் செயல்முறை என்ன என்பதை அறிந்து கொள்வது அவசியமாகும். கடலுக்கு அடியில் இருக்கும் மலை முகடுகளின் கீழ் உருவாகும் எரிமலைக் குழம்புகள், பீறிட்டு ரிட்ஜுகள் வழியாக (மலைகளில் உருவாகும் இடைவெளி) வெளியே வரும்போது, கடல் நீரில் பட்டு ஆவியாகின்றன. இந்த செயல்முறை தான் ஹைட்ரோதெர்மல் என்று அழைக்கப்படுகிறது.

ஹைட்ரோதெர்மல் சல்ஃபைடு என்றால் என்ன?

கடலின் அடிவாரத்தில், நிலத்தட்டுகள் ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் பகுதிகளில், கடல் நீர் பாறைகளின் உட்புறத்தில் ஊடுருவி, மிக அதிக வெப்பத்தைப் பெற்று, கனிமங்களுடன் கலந்து, கருப்பு புகை போல வெளியேறுகிறது. இதுவே "ஹைட்ரோதெர்மல் வென்ட்" அல்லது "பிளாக் ஸ்மோக்கர்" எனப்படுகிறது.

இந்த வெப்ப நீரோட்டத்தின் காரணமாக, கடல் தளத்தில் தாதுக்கள் படிந்து, கனிம வளம் நிறைந்த படிமங்கள் உருவாகின்றன. இவையே ஹைட்ரோதெர்மல் சல்பைடு படிமங்கள் ஆகும். இந்த படிமங்களில் கோபால்ட், நிக்கல், மாங்கனீசு, தங்கம், வெள்ளி, காப்பர் போன்ற மிகவும் மதிப்புமிக்க உலோகங்கள் நிறைந்துள்ளன.

ஹைட்ரோதெர்மல் சல்ஃபைடு எப்படி உருவாகிறது?

படிமம் கண்டுபிடித்தது குறித்த தேசிய பெருங்கடல் ஆராய்ச்சி தொழில்நுட்ப நிறுவனத்தின் (NIOT) ஆழ்கடல் தொழில்நுட்பத்தின் தலைவரும், அறிவியலறிஞர் டி.எஸ்.ரமேஷ் சேதுராமன், "ஆழ்கடலில் கனிமங்கள் இருக்கிறது. பாலிமெட்டாலிக் நோடுலஸ் (Polymetallic nodules) 5500 மீட்டரில் இருக்கிறது. மீத்தேன் ஹைரேட்ஸ் 1500 மீட்டர் முதல் 3 ஆயிரம் மீட்டர் (சுமார் 9,400 அடி) ஆழத்தில் இருக்கிறது. ஹைட்ரோதெர்மல் சல்ஃபைட்ஸ் 3 ஆயிரம் மீட்டர் முதல் ஐந்தாயிரம் மீட்டர் (சுமார் 16,500 அடி) கடல் ஆழத்தில் இருக்கிறது. அங்குள்ள தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப ஒவ்வொரு படிமமும் இருக்கும்.

ஹைட்ரோதெர்மல் சல்பைடு இரண்டு தட்டுகள் விரியும் இடங்களில் (ரிட்ஜ்கள்) நடுக்கடல் முகடுகள் எனப்படும் கடலில் உள்ள மலைத்தொடர்கள் உருவாகும். நில அடுக்குகளில் ஏற்படும் மாற்றங்களினால் எரிமலைக் குழம்புகள் துளையின் வழியாக மேலே வரும் போது, கடல் நீரின் குளிர்ந்த தன்மையால் ஆவியாகிறது. அது தான் ஹைட்ரா தெர்மல் செயல்முறை.

அந்த ஆவியானது தாதுக்கள் மற்றும் கனிமங்கள் நிறைந்த மண்ணுடன் வெளியேறுவதை 'சுமோக்கர்' என்று குறிப்பிடுகிறோம். அதில் இருந்து கடற்பரப்பில் விழுவதே படிமங்களாக சேர்கின்றன. அவை தான் ஹைட்ரோதெர்மல் சல்ஃபைட்ஸ் எனப்படுகிறது. இந்த படிமத்தில் தாமிரம் (காப்பர்), கோபால்ட், நிக்கல், மாங்கனீசு, தங்கம், வெள்ளி போன்ற கனிமங்கள் இருக்கும்," என்று தெரிவித்தார்.

இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்ட நிலம்

தொடர்ந்து பேசிய அவர், "தென் கடல் பகுதியில் ஆழ்கடலில் மெரிசியஸ் நாட்டிற்கு அருகில் இந்தியாவிற்கு சர்வதேச கடல் அமைப்பு 10 ஆயிரம் சதுர அடியை ஒதுக்கீடு செய்துள்ளனர். அந்தப் பகுதியில் கனிமங்கள் இருக்கிறதா என்பதை அறிய முதலில் கப்பலில் இருந்தும், அதனைத் தொடர்ந்து ஆழ்கடலுக்கு அடியில் சென்றும் ஆய்வு செய்வர். ரிட்ஜ்களில் பிளாக் சுமோக்கர் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வோம்.

பிளாக் சுமோக்கர் 500 எனும் மிகவும் குறைவான டையாமீட்டரில் 1.5 மீட்டர் உயரத்துடன் இருக்கும். அது 4,500 மீட்டர் ஆழத்தில் இருப்பதை கண்டுபிடிக்க முடியாது. முதலில் ஒரு பெரியமலை இருப்பது போல் தெரியும். அதில் எங்கு 'சுமோக்கர்' இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க ஆய்வு செய்வோம்.

'நேஷனல் சென்டர் ஃபார் போலார் ஒஷன் ஆராய்ச்சி நிறுவனம்' (NCPOR) உடன் இணைந்து இந்த ஆய்வுகளை செய்து வருகிறோம். ஆளில்லாத வாகனத்தின் மூலம் ஆழ்கடலில் டிசம்பர் 2024-இல் ஆய்வு செய்து இந்த கனிம படிமம் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளோம். தற்பொழுது எங்கெல்லாம் படிமம் இருக்கிறது என்பதை கண்டுபிடித்து வருகிறோம். இதற்காக கனிமங்களை எடுத்து ஆய்வு செய்தால் தான் அடுத்தக்கட்ட நடவடிக்கையை தொடங்க முடியும். இந்த ஆய்வின் அடுத்த நிலைக்கு 2031 ஆண்டு வரை ஆகலாம் என கணிக்கப்பட்டுள்ளது," என்று கூறினார்.

முதலில் படம்பிடித்த இந்தியா

இந்த ஆய்வு குறித்து பேசிய தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் அறிவியலாளர் என்.ஆர். ரமேஷ், "ஆழ்கடலில் ஏற்படும் வெப்பத்தினால் எரிமலையில் இருந்து வரும் வெப்பத்தின் மூலம் கனிமப்படிவு முடிச்சுகளில் தாமிரம், கோபால்ட், நிக்கல் மற்றும் மாங்கனீசு போன்ற உலோககங்கள் உருவாகின்றன. முன்பு கப்பலில் இருந்து கடலின் புவியியல் தோற்றத்தை எடுத்துள்ளனர்,"

இதையும் படிங்க
  1. ஹைப்பர்லூப் ரயில் டிராக் ரெடி? கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத வேகம்!
  2. NIOT: கப்பலில் கடல் நீர் சுத்திகரிப்பான்; தெற்காசியாவிலேயே முதல் ஆய்வகம் ரெடி!
  3. வானில் பறந்தபடியே வீடியோ கால் பேசலாம்; கத்தார் ஏர்வேஸ் ஸ்டார்லிங்க் ஒப்பந்தம்!

"ஆனால் தற்போது அதன் அருகில் சென்று தோற்றத்தை ஆய்வு செய்துள்ளோம். ஆளில்லா வாகனத்தை பயன்படுத்தி , கடலில் படிமங்கள் உள்ள இடத்தில் இருந்து 120 மீட்டர் (சுமார் 400 அடி) உயரத்தில் முதலில் புவியியல் அமைப்பை ஆய்வு செய்து விட்டு, அதன் பின்னர் ஹைட்ரோ தெர்மல் சல்பைடு உருவாகும் சிம்னி எங்குள்ளது என்பதை கண்டுபிடித்து, புகைப்படம் எடுத்துள்ளோம். நேரடியாக இந்தியாவில் முதல்முறையாக புகைப்படம் எடுத்துள்ளோம்," என்று தெரிவித்தார்.

கண்டுபிடித்தது எப்படி?

தென்இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஹைட்ரோதெர்மல் சல்பைட் இருப்பதை எவ்வாறு ஆய்வு செய்து கண்டுபிடித்தோம் என்பது குறித்து பேசிய அறிவியலாளர் என்.ஆர்.ரமேஷ், இந்தியாவின் ஹைட்ரோதெர்மல் சல்பைட் திட்டத்தின் கீழ் ஆய்வு செய்தோம். முன்பு கப்பலில் இருந்து கடலின் புவியியல் தோற்றத்தை எடுத்துள்ளனர். ஆனால், தற்பொழுது அதன் அருகில் சென்று தோற்றத்தை ஆய்வு செய்துள்ளோம் என்றார்.

மேலும், "ஆளில்லா வாகனத்தை பயன்படுத்தி, கடலில் படிமங்கள் உள்ள இடத்தில் இருந்து 120 மீட்டர் உயரத்தில் முதலில் புவியியல் அமைப்பை ஆய்வு செய்து விட்டு, அதன் பின்னர் சுமோக்கர் எங்குள்ளது என்பதை கண்டுபிடித்து, புகைப்படம் எடுத்துள்ளோம். நேரடியாக இந்தியாவில் முதல்முறையாக புகைப்படம் எடுத்துள்ளோம்.

சகார்நிதி கப்பலில் சென்று ஆய்வு செய்யும் போது, அந்தப் பகுதியில் கடல் அலைகள் சீற்றமாகத்தான் இருக்கும். அந்த சூழ்நிலையில் கப்பலை நிறுத்துவது கடினமாக இருக்கும். அதன் இடையே கப்பலை நிறுத்தி 30 மணி நேரம் NIOT-இன் பிரத்யேக ஆளில்லா வாகனத்தை பயன்படுத்தி இதை கண்டுபிடித்துள்ளோம்.

இதற்காக கடலில் சுமார் 195 கிலோ மீட்டர் பயணம் செய்திருப்போம். கிட்டத்தட்ட 80 சதுர கிலோ மீட்டர் தூரம் ஆய்வு செய்துள்ளோம். மேலும் படிமங்களுக்கு மேல் ஆளி்ல்லா வாகனத்தை 5 முதல் 10 மீட்டர் உயரத்தில் இயக்க வேண்டும். அப்போது தான் புகைப்படம் நன்றாக இருக்கும். அது போன்ற நிலையில் இயக்கும் போது ஆழ்கடலில் உள்ள ஏற்றத்தாழ்வுகளால் கடினமாக இருக்கும்.

தொடர்ந்து ஆய்வு செய்து, எந்தப் பகுதியில் எவ்வளவு கனிமம் இருக்கிறது என்பதை கண்டறிய வேண்டும். முன்னதாகவே, ஆளில்லா வாகனத்தை செலுத்த வேண்டிய பாதையை வகுத்து புரோகிராம் செய்துவிடுவோம். அதனால் அது தொடர்ந்து செயல்பட்டு, திட்டமிட்டப்படி செயல்படும்," என்று தெரிவித்தார்.

ஆனால், ஆழ்கடல் சுரங்கம் தொடர்பான சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டியது இந்த நேரத்தில் அவசியமானதாகப் பார்க்கப்படுகிறது. தொடர்ச்சியான ஆய்வுகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மூலம், இந்த கண்டுபிடிப்பை பயனுள்ள வகையில் பயன்படுத்தி, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்க முடியும்.

ABOUT THE AUTHOR

...view details