2025 மாடல் காரை இப்போதே களத்தில் இறக்கிய ஜீப் நிறுவனம்! - JEEP MERIDIAN 2025
ஜீப் இந்தியா (Jeep India) தனது மேம்படுத்தப்பட்ட 2025 ஜீப் மெரிடியன் (Jeep Meridian) எஸ்யூவி காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரில் பல புதிய சிறப்பம்சங்களும், பாதுகாப்பு அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
ஜீப் மெரிடியன் 2025 எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டது. (Jeep India)
ஜீப் இந்தியா (Jeep India) நிறுவனம் தனது 7 இருக்கைகள் அடங்கிய ஜீப் மெரிடியன் (Jeep Meridian) எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகம் செய்தது. 2025-ஆம் ஆண்டின் மாடலாக இந்த கார் களமிறக்கப்பட்டுள்ளது. இதன் டெல்லி எக்ஸ்-ஷோரூம் தொடக்க விலை ரூ.24.99 லட்சமாக உள்ளது.
மேம்படுத்தப்பட்ட ஜீப் மெரிடியன் ஐந்து மற்றும் ஏழு இருக்கைகள் கொண்ட உள்ளமைவுகளில் லாங்கிட்டியூட், லாங்கிட்டியூட் பிளஸ், லிமிடெட் (ஓ) மற்றும் ஓவர்லேண்ட் ஆகிய நான்கு வகைகளில் விற்பனைக்கு வருகிறது. இதில் 70-க்கும் அதிகமான பாதுகாப்பு அம்சங்களும், பல பிரீமியம் அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் இதன் அறிமுக நிகழ்வில் தெரிவித்தது.
வடிவமைப்பு:
2025 ஜீப் மெரிடியனின் வெளிப்புறத்தைப் பார்க்கும்போது, நிறுவனம் இங்கு எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. இது 7-ஸ்லாட் கிரில், DRLகளுடன் நேர்த்தியான LED முகப்பு விளக்குகள் (ஹெட்லேம்புகள்), மாறுபாட்டிற்கு ஏற்ப வெவ்வேறு வடிவங்களில் 18-இன்ச் அலாய் வீல்கள், நேர்த்தியான LED டெயில்லேம்ப்களுடன், அதே மஸ்குலார் டிசைனை மெரிடியன் பெற்றுள்ளது.
ஜீப் மெரிடியன் 2025 சிறப்பம்சங்கள்:
ஜீப் மெரிடியன் சாலையில் பயணிக்கிறது. (Jeep India)
புதிய மெரிடியன் லெவல் இரண்டு ADAS பாதுகாப்புடன் வருகிறது. மேலும் பல இணைப்பு அம்சங்களுடன் புதிய தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது. இந்த காரில் 10.1 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே இணைப்பு, 10.2 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வயர்லெஸ் சார்ஜர், காரின் ஒவ்வொரு பகுதிகளிலும் மாற்றியமைக்க ஏற்றவாறு கொடுக்கப்பட்டுள்ள காலநிலை கட்டுப்பாடு ஆகிய மேம்பட்ட அம்சங்கள் உள்ளன.
இது பனோரமிக் சன்ரூஃப், எலெக்ட்ரிக் திறனால் இயக்கப்படும் காற்றோட்டமான முன் இருக்கைகளையும் பெறுகிறது. இந்த ஜீப் மெரிடியன் காரை ஐந்து அல்லது ஏழு இருக்கை என இரு வகைகளில் தேர்வு செய்துவாங்கலாம். முக்கியமாக அடிப்படை மாடலில் எலெக்ட்ரிக் திறனால் இயக்கப்படும் காற்றோட்டமான முன் இருக்கைகள், சன்ரூஃப் போன்ற சில அம்சங்கள் இருக்காது.
ஜீப் மெரிடியன் 2025 மாடல் விலை:
ம்லைக் காடுகளில் பயணிக்கு ஜீப் மெரிடியன் 2025 எஸ்யூவி கார். (Jeep India)
வகைகள்
விலை
5 இருக்கைகள் உடன் வரும் ஜீப் மெரிடியன் லாங்கிட்டியூட்
ரூ.24.99 லட்சம்*
ஜீப் மெரிடியன் லாங்கிட்டியூட் பிளஸ்
ரூ.27.5 லட்சம்*
ஜீப் மெரிடியன் லிமிட்டெட் ஆப்ஷனல்
ரூ.30.49 லட்சம்*
ஜீப் மெரிடியன் ஓவர்லேண்ட்
ரூ.36.49 லட்சம்*
*அனைத்தும் எக்ஸ்-ஷோரும் விலைக்கே பொருந்தும்.
ஜீப் மெரிடியனின் எஞ்சின்:
புதிய மேம்படுத்தப்பட்ட ஜீப் மெரிடியனின் பவர்டிரெய்னில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதில் அதே 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் கொடுக்கப்பட்டுள்ளது. இது 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 168 பிஎச்பி (bhp) பவரையும், 350 என்எம் (Nm) டார்க் திறனையும் வெளிப்படுத்தும். மேலும், இது முன்பு போலவே 4x2 மற்றும் 4x4 ஆகிய இரண்டு வகைகளில் கிடைக்கிறது.