வாட்ஸ்ஆப் அப்டேட்: தொடர்புகள் இணைப்பதை எளிதாக்கிய மெட்டா! - WHATSAPP LINKED DEVICES
வாட்ஸ்ஆப் வெளியிட்டுள்ள புதிய அப்டேட் வாயிலாகப் பயனர்கள் இணைக்கப்பட்ட தகவல் சாதனங்களிலிருந்து தொடர்புகளைச் சேர்க்கவும் நிர்வகிக்கவும், தொடர்புகளை செயலியில் பிரத்தியேகமாக சேமிக்கவும் அனுமதிக்கிறது.
இணைக்கப்பட்ட டிவைஸ்களில் இருந்து தொடர்பு எண்களை சேர்க்கும் புதிய அப்டேட்டை வாட்ஸ்ஆப் வழங்கியுள்ளது. (WhatsApp)
மெட்டா (Meta) நிறுவனத்தின் கீழ் இயங்கும் வாட்ஸ்ஆப் (WhatsApp) தளம் பயனர்களுக்குத் தேவையான பல புதுப்பிப்புகளை (அப்டேட்டுகளை) அவ்வப்போது வழங்குகிறது. தற்போது வெளியான புதுப்பிப்பின் வாயிலாகப் பயனர்கள் கணினியில் இணைக்கப்பட்ட வாட்ஸ்ஆப் வெப்-ஐ பயன்படுத்தும்போதே, புதிய தொடர்புகளைச் சேர்க்கவும், நிர்வகிக்கவும் முடியும்.
இதுமட்டுமில்லாமல், தொடர்புகளை வாட்ஸ்ஆப் பயன்பாட்டிற்காக மட்டும் சேமிக்க முடியும். இதனால், ஒவ்வொரு முறையும் செயலியைத் திறக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. முன்னதாக, வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் முதன்மை மொபைலில் இருந்து மட்டுமே நம்மால் தொடர்புகளை நிர்வகிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது, பயனர்கள் வாட்ஸ்ஆப் வெப் மற்றும் விண்டோஸ் பயன்பாடு உள்ளிட்ட இணைக்கப்பட்ட தகவல் சாதனங்களிலிருந்து தொடர்புகளைச் சேர்க்கவும் நிர்வகிக்கவும் முடியும் என்பது தான் சிறப்பு.
வாட்ஸ்ஆப் பிரத்தியேக தொடர்புகள்:
இந்த புதுப்பிப்பின் முக்கியத்துவம் என்னவென்றால், வாட்ஸ்ஆப் தளத்திற்காக மட்டுமே நம்மால் தொடர்புகளைச் சேகரிக்க முடியும். தேவையில்லாமல், மொபைல் தொடர்புகளுடன் அதை இணைக்கத் தேவையில்லை. இதுவும் ஒரு விருப்பத் தேர்வாகத் தான் சேர்க்கப்பட்டுள்ளது.
நம் தேவைக்கேற்ப வாட்ஸ்ஆப் தளத்தில் சேமித்த தொடர்புகளை மொபைல் தொடர்பு கணக்கிலும் சேர்ப்பதற்கான ஆதரவை இந்த புதிய அப்டேட் வழங்குகிறது.
சமீபகாலமாக, நிறுவனம் புதுப்பிப்புகள் வாயிலாகப் பயனர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. இதில் முக்கியமாகச் சொல்ல வேண்டும் என்றால், வீடியோ அழைப்புகளில் சேர்க்கப்பட்ட ஃபில்டர்கள் தான். இதில், நம் முகத்தில் இருக்கும் புள்ளிகளை மறைத்து அழகாகக் காட்டு ஒரு அம்சம் வழங்கப்பட்டுள்ளது. அதை பயன்படுத்திப் பார்த்தபோது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஒத்திசைவுடன் சிறப்பாக வேலை செய்தது.
கூடுதலாக, வீடியோ அழைப்புகளின் போது, பின்னணியை மாற்றும் புதிய அம்சமும் சேர்க்கப்பட்டுள்ளது. நல்ல வெளிச்சம், வேகமாக இணையம் ஆகியவற்றுடன் அழைப்புகளை மேற்கொள்ளும் பயனர்களுக்கு இது சீராக வேலை செய்கிறது. தொடர்ந்து பல புதுப்பிப்புகளை நிறுவனம் தொடர்ந்து அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல புதுப்பிப்புகளை வழங்கி சந்தையில் தங்களுக்குப் போட்டியாளரே இல்லாத சூழலை வாட்ஸ்ஆப் உருவாக்கியிருக்கிறது. எனினும், பயனர்களுக்குச் சிறப்பான சேவைகள் கிடைத்தால் தான், அவர்களது உற்பத்தித் திறன் பெருகும் என்பது இக்காலத்தில் மறுக்கமுடியாத உண்மையாக இருக்கிறது.