திண்டுக்கல்:இருக்கை விவகாரம் தொடர்பாக பேருந்தில் இருந்த பெண்களுக்கும், நடத்துனருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பெண்ணின் உறவினர் ஒருவர் விருப்பாச்சியில் பேருந்தை வழிமறித்து நடத்துனரை தாக்கியுள்ளார். இச்சம்பவம் குறித்து சத்திரப்பட்டி காவல் துறையின் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து தினந்தோறும் ஏராளமான பேருந்துகள் பழனி மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றன. அந்த வகையில், தனியார் பேருந்து ஒன்று நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பழனி செல்வதற்காக ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் தயார் நிலையில் இருந்துள்ளது. அப்போது, நடத்துனர் பயணிகளிடம் பழனிக்குச் செல்பவர்கள் மட்டும் முதலில் ஏறுங்கள் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில், ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாச்சி பகுதியைச் சேர்ந்த இரு பெண்கள் பேருந்தில் ஏறி இருக்கையில் அமர்ந்ததாக கூறப்படுகிறது. நடத்துனர் அப்பெண்களிடம் பழனி செல்பவர்களுக்கு இருக்கை இல்லை. எனவே, அவர்களுக்கு இருக்கை வழங்குமாறு கூறியதாக தெரிகிறது. இதனால் அப்பெண்களுக்கும், நடத்துனருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.