சென்னை:கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து அசோக் பில்லர் நோக்கி செல்லும் நெடுஞ்சாலையில், மழை நீர் வடிகால் பணிகள் வெகு நாட்களாக நடைபெற்று வருகின்றன. 10 அடிக்கு 10 அடி பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த மழை வெள்ளத்தின் போது தனியார் தொலைக்காட்சி ஊழியர் ஒருவர் இதே நெடுஞ்சாலையில் மழை நீர் வடிகால் பணியின் போது தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார்.
இந்நிலையில், மீண்டும் அதே போன்று உதயம் திரையரங்கம் அருகே மழை நீர் வடிகால் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. வடிகால்வாய் அருகே அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்கிற இளைஞர் தனது வீட்டின் அருகில் இருக்கக்கூடிய குழந்தை மற்றும் செல்ல பிராணியுடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக மது போதையில் இருந்த அவர் நிலை தடுமாறி மழை நீர் வடிகால் பள்ளத்தில் விழுந்துள்ளார். பள்ளம் முழுவதும் கழிவுநீர் தேங்கியுள்ளதால் அருகில் இருந்தவர்கள் மீட்க முற்பட்டும் மூச்சு விட முடியாமல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதையும் படிங்க:தமிழக அமைச்சரவையில் பட்டியல் சமூகத்தினர் அதிகரிப்பு.. அரசியல் பின்னணி என்ன?