சென்னை:சென்னை மதுரவாயல் பெருமாள் கோயில் தெருவில் உள்ள குடியிருப்புப் பகுதிகளின் கழிவுநீர் வெளியேற்றத்துக்காக மெட்ரோ குழாய்கள் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது. மேலும், இந்த குழாய்களை மொத்தமாக இணைக்கும் வகையில், 20 அடி அகலம் மற்றும் 8 அடி ஆழத்தில் கழிவுநீர் தொட்டி ஒன்று கட்டப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களாக இந்த தொட்டி திறந்தே இருந்த நிலையில், சமீபத்தில் தொட்டியின் பாதி பகுதியை மட்டும் இரும்பு தகரத்தை வைத்து மறைத்துள்ளனர். இருப்பினும், பாதி தொட்டி திறந்த வண்ணம் இருந்ததால், ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்வதற்கு முன்னால் தொட்டியை மூடும்படி அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில், இக்கழிவுநீர் தொட்டியில் சரண்ராஜ்(30) என்ற இளைஞர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்தவர் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. சரண்ராஜ் வானகரம் மீன் மார்க்கெட்டில் லோடுமேன் வேலை செய்து வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.