விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. இதனை தொடர்ந்து இந்தியா கூட்டணி கட்சியினர், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் மற்றும் நாம் தமிழர் வேட்பாளர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என அனைவரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக வேட்பாளர் மற்றும் இளைஞர் வாக்குவாதம் (Credits - ETV Bharat Tamil Nadu) தொடர்ந்து, கட்சிகள் ஒன்றை ஒன்று குறை கூறி மக்களிடையே வாக்குகளை சேகரித்து வருகின்றனர். மேலும், பிரச்சாரம் செய்ய வரும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரையும் பொதுமக்கள் கேள்விகளை கேட்டு ஓடவிடும் சம்பவம் நடைபெற்று வருகிறது. தங்கள் எம்எல்ஏ மரணமடைந்ததால் மீண்டும் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடுகிறது.
பணபலம், ஆளுங்கட்சி அராஜகம் உள்ளிட்டவற்றால் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தார் அதிமுகவின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி. அதே நேரத்தில் வன்னியர் வாக்குகள் அதிகம் இருப்பதால் விக்கிரவாண்டி தொகுதியில் பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் என அறிவித்தார் ராமதாஸ். அந்த கட்சியின் சார்பில் வேட்பாளராக சி.அன்புமணி அறிவிக்கப்பட்டுள்ளளார். இதேபோல தருமபுரி தொகுதியில் சௌமியா அன்புமணியை எதிர்த்து போட்டியிட்ட அபிநயா விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் 20 அமைச்சர்கள் விக்கிரவாண்டி தொகுதியில் முகாமிட்டு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, அன்னியூர் சிவா இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களுடன் இறுதிகட்ட பிரச்சாரத்தில் இன்று ஈடுபட்டபோது, தனக்கு வாக்களித்தால் திமுக அரசின் நலத்திட்டங்களை பெற்றுத் தருவேன் எனக் கூறியதோடு, திமுக அரசு அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.
அப்போது அவரது பிரச்சாரத்தை கேட்டு கொண்டிருந்த இளைஞர் ஒருவர், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின்போது 'தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று திமுக அறிவித்தது. அந்த வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும்' என அன்னியூர் சிவாவை நோக்கி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அன்னியூர் சிவா, "அது எம்.எல்.ஏ.வால் பேச முடியாது. பிரதமர் தான் பேச வேண்டும். இந்தியா முழுவதும் இருக்கிறது. முதல் குஜராத்தில் அமல்படுத்த சொல்லுங்க" என்றார்.
இதனையடுத்து அங்கிருந்த திமுகவினர் அந்த இளைஞரை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் அவர் அவர்களுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது 'உங்க வேட்பாளரிடம் நாங்க கேட்டோமா? நீங்க ஏன் கேக்குறீங்க' என திமுகவினர் கேட்டனர். தற்போது இந்த வீடியோவை பாமகவினர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, "இந்திய அரசியல் சாசனத்தின் 47ஆம் பிரிவில் மதுவிலக்கு மாநில அரசின் அதிகாரத்தின் கீழ் அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியே நினைத்தாலும் மதுவிலக்கை அமலாக்க முடியாது. ஆனால், மு.க.ஸ்டாலினால் முடியும். இந்த அடிப்படை தெரியாத திமுக வேட்பாளர்" என பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பிடிஓவிடம் புகார் கொடுத்த நபரை தரக்குறைவாக பேசிய ஊராட்சி மன்ற தலைவர்.. ஆடியோ வெளியீடு! - DMK panchayat president audio