தேனி: மதுரை மாவட்டம், பேரையூர் அடுத்த பெருங்காமநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் புவனேந்திரன் (27). இவர் உசிலம்பட்டி அருகே எருமார்பட்டியைச் சேர்ந்த மாயி என்பவரது மகள் பவித்ரா (23) என்பவரை, 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 4 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் மது, கஞ்சா போன்ற போதை பழக்கத்திற்கு அடிமையான புவனேந்திரன், அவரது மனைவியை சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, தனது தந்தையுடன் தேனி பழனிசெட்டிபட்டியில் உள்ள தனது பாட்டி அம்மாபிள்ளை என்பவர் வீட்டிற்கு பவித்ரா வந்துள்ளார்.
அதன் பின்னர், நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) தனது மனைவி பவித்ராவைக் காண நண்பர் முருகேசன் என்பவருடன் வந்த புவேந்திரன், பவித்ராவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, பவித்ராவை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றுள்ளார். அதனைத் தடுக்க முயன்ற பவிதராவின் தந்தையையும், கத்தியால் குத்திவிட்டு புவனேந்திரன் தப்பிச் சென்றுள்ளார்.
இதில் பவித்ரா மற்றும் அவரது தந்தை இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதன் பின்னர், அங்கிருந்த புவேந்திரனின் நண்பர் முருகேசனை அப்பகுதி மக்கள் பிடித்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசாரிடம் முருகேசனை பொதுமக்கள் ஒப்படைத்துள்ளனர்.