தேநீர் கடையில் தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள் சென்னை:சென்னை ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகரில் டீக்கடை வைத்து நடத்தி வருபவர் ரஷீத் (வயது 37). இவரது கடைக்கு கடந்த 13ஆம் தேதி வந்த இரண்டு இளைஞர்கள், கடைக்குள் ஆளுக்கு ஒரு திசையாக நின்று பொருட்களை வேடிக்கை பார்த்து கொண்டிருந்து உள்ளனர்.
பின்னர், பொருட்கள் வாங்க வந்தது போல பாவணைகளை செய்தும், பண்டங்களை சாப்பிட்டும் கடையில் இருந்தவரை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும், கல்லாவில் நின்று கொண்டிருந்த ஹக்கீம் என்பவரின் கவனத்தை திசை திருப்புவதற்காக சிகரெட் எடுக்க சொல்லி அந்த நேரத்தை பயன்படுத்தி கல்லாவில் இருந்து பணத்தை திருட முயன்றுள்ளனர்.
இதை பார்த்த கடை உரிமையாளர், இளைஞர்களை எதுவும் கேட்காமல் அமைதியாக இருக்கவே, இளைஞர்கள் அவரிடம் ஓசியில் சிகரெட் கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடை உரிமையாளர் சிகரெட் தர மறுத்ததால், இளைஞர்கள் இருவரும் வெளியில் சென்று இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பட்டாக் கத்தியை எடுத்துக் கொண்டு கடை உரிமையாளரை மிரட்டி உள்ளனர்.
மேலும், அங்கிருந்த பொருட்களை கத்தியால் வெட்டி விட்டு, கத்தியை இடுப்பில் சொருகிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். இது குறித்து கடையின் உரிமையாளர் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து உதவி ஆய்வாளர் கண்ணன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
கடையில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருந்த காட்சிகள் மூலம் ஓசி சிகரெட் கேட்டு மிரட்டிய ஒரு இளைஞரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் தாம்பரத்தை சேர்ந்த அருண் (வயது 20), என்பது தெரியவந்தது. மேலும் தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் இளைஞர்கள் கடையில் கத்தியை காட்டி மிரட்டும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:பணிப்பெண் தாக்குதல் வழக்கு: சிறுமியின் பள்ளிச் சான்றிதழ், ஆறு மாத சம்பள பாக்கி நீதிமன்றத்தில் ஒப்படைப்பு!