வேலூர்:சட்டத்திற்குப் புறம்பாகக் காட்டு விலங்குகள் மற்றும் பறவைகளை வேட்டையாட நாட்டுத் துப்பாக்கியைத் தயாரிக்க முயன்ற இளைஞர், அதனை இன்று (ஏப்.16) சோதனை செய்யும்போது படுகாயமடைந்துள்ளார். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த கீழ்கொத்தூர் அருகே உள்ள கும்பல்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன் (22). இவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், ஜனார்த்தனன் யூடியூப் வீடியோவை பார்த்து நாட்டுத் துப்பாக்கியைத் தயாரிக்க முடிவு செய்துள்ளார். அதற்காக பிளாஸ்டிக் குழாய்கள், தீப்பெட்டி உள்ளிட்ட பொருட்களைச் சேகரித்துக் கடந்த சில நாட்களாக நாட்டுத் துப்பாக்கியைத் தயாரித்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து நேற்று துப்பாக்கியைப் பரிசோதனை செய்ய முயன்ற அவர், நாட்டுத் துப்பாக்கியில் தீக்குச்சிகளை நிரப்பியுள்ளார்.
அப்போது, கை தவறி அழுத்தியதில், துப்பாக்கி திடீரென பயங்கர சதத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது. இதில் ஜனார்த்தனனுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, அவர் ரத்த காயத்துடன் வலியால் துடித்துக் கொண்டிருந்துள்ளார்.
இதனையடுத்து, அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மலைக்கோடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கீழ்கொத்தூர் கிராம நிர்வாக அலுவலர் சிவசக்தி வேப்பங்குப்பம் போலீசாரிடம் புகாரளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும், அவர் தயாரித்த நாட்டுத் துப்பாக்கி மற்றும் அதற்காகப் பயன்படுத்திய பொருட்களை போலீசார் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், ஜனார்த்தனன் சட்டத்திற்குப் புறம்பாகக் காட்டு விலங்குகள் மற்றும் பறவைகளை வேட்டையாட நாட்டுத் துப்பாக்கி போன்ற கருவியைத் தயாரித்துள்ளது தெரிய வந்தது. மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:தேர்தல் மண்டல அலுவலர்கள் கார்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தம்: நேரில் சென்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்! - Lok Sabha Election 2024