ஈரோடு: பள்ளி மாணவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தவும், வசிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தவும் மற்றும் வாசிப்பின் அவசியத்தை உணர்த்தும் வகையிலும் சத்தியமங்கலம் விதைகள் வாசகர் வட்டம் மற்றும் சுந்தர் மஹால் ஆகியவை சார்பில் இன்று (ஜூலை 17) புத்தகக் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.
இன்று முதல் தொடர்ந்து 6 நாள்கள் நடைபெறும் இந்த புத்தகக்கண்காட்சியில் தினந்தோறும் எழுத்தாளர்கள் மற்றும் சொற்பொழிவாளர்கள் பங்கேற்கின்றனர். இதில் முதல் நாளான இன்று 'நீர்வழிப் படூஉம்' நாவலின் ஆசிரியரான சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தேவிபாரதி கலந்துகொண்டார்.
மேலும், இந்த கண்காட்சியில் தமிழ் இலக்கியம், இந்திய வரலாறு, அரசியல், கவிதை, சிறுகதைகள், அறிவியல், வீரப்பன் குறித்த புத்தகம், விவசாயம், குழந்தை தாலாட்டு, நீர் மேலாண்மை, நீதிமன்றம், பொது அறிவு, அகராதிகள் குறித்த ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.
இதுமட்டும் அல்லாது, மாணவ, மாணவியரின் பங்களிப்பு அவசியம் இருக்க வேண்டும் என்பதற்காக சத்தியமங்கலம் பகுதியில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இன்று தொடக்க விழவிற்கு வருகைதந்த மாணவ, மாணவியர்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள புத்தகங்களை பார்வையிட்டு அதில், அறிவியல், கதை, தமிழ் இலக்கியம், அரசியல் சார்ந்த புத்தகங்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.