கோயம்புத்தூர்: முதன்முதலில் யானைகள் தினம் 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் நாள் கொண்டாடப்பட்டது. வில்லியம் சாட்னர் என்பவர் எடுத்த 'வனத்திற்குள் திரும்பு' என்ற படம் வெளியான நாளை தான் யானைகள் தினமாகக் கொண்டாடுகின்றனர். வரலாற்றுக்கு முந்தைய அழகு, சுற்றுச்சூழல் முக்கியத்துவம் ஆகியவற்றை உருவகப்படுத்துவது இந்த நாளின் நோக்கமாகும்.
வன உயிரின பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் முருகானந்தம் (Video Credit - ETV Bharat Tamilnadu) யானைகளின் எண்ணிக்கை குறைந்து வரும் இந்த காலகட்டத்தில் அதன் முக்கியத்துவம் என்னவென்பது குறித்து வலியுறுத்தும் வகையில் இந்த நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும், யானைகளின் வாழிடங்களை பாதுகாப்பது, யானைகள் வாழும் சூழலை உருவாக்குவது, அவற்றின் எதிர்கால சந்ததிகளுக்கு வாழ்வதாரத்தை உறுதி செய்வது இந்த கருப்பொருளின் அர்த்தமாகும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் யானைகளுக்கு இருக்கும் முக்கியத்துவம் குறித்தும், யானைகளின் அவலநிலை குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த மற்றும் யானைகளின் பாதுகாப்புக்கான தீர்வுகளை சர்வதேச அளவில் முன்னெடுக்க ‘உலக யானைகள் தினம்’ கொண்டாடப்படுகிறது.
வனப்பகுதியை ஒட்டியுள்ள குப்பை கிடங்குகளால் யானைகளின் உணவு பழக்க வழக்கத்தில் மாறுதல், குடியிருப்பை நோக்கி படையெடுக்கும் யானைகளால் மனிதர்கள் மற்றும் மிருகங்களுக்கிடையில் ஏற்படும் மோதலுக்கு வாய்ப்புள்ளதாக கூறும் சூழலியல், ஆர்வலர்கள் வனத்துறை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை பொறுத்தவரையில், யானைகளின் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு மற்றும் யானைகளுக்கு தேவையான உணவு பற்றாக்குறை காரணமாக யானைகளுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் மற்றும் மருதமலை அடிவார பகுதிகளில், ஊராட்சிகளால் கொட்டப்படும் குப்பைகளால் யானைகளின் உணவு பழக்க வழக்கங்கள் மாறிவிட்டதாக கூறுகின்றனர்.
இது குறித்து கோயம்புத்தூர் வன உயிரின பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் முருகானந்தம் கூறுகையில், “கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் சோமையம்பாளையம் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் கொட்டப்படுகிறது. இதனால் வனத்தில் இருந்து வெளியேறும் வன விலங்குகள், இந்த குப்பைகளை உட்கொள்கிறது. இதனால், அவற்றின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது
இவ்வாறு, வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் குப்பை கிடங்கில் கொட்டப்படும் காய்கறி கழிவுகள், மற்றும் மசால பாக்கெட்டுகளை சாப்பிடுவதால், அதன் தொடர்ச்சியாக உணவு பொருள்களைத் தேடி குடியிருப்பு பகுதிகளில் நுழைவது அதிகமாகிறது. இதன் காரணமாக மனிதர்கள் மற்றும் விலங்குகளிடையில் மோதல்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
இவ்வாறு, வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்புக்குள் புகும் வனவிலங்குகளை சமாளிப்பது வனத்துறையினருக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. வனத்துறையின் ஜீப் அல்லது சைரன் சவுண்டுக்கு பயப்படும் யானைகள் தற்போது அதற்கெல்லாம் அஞ்சுவது இல்லை. அதன் குணங்கள் மாறி வருகிறது. எனவே, மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள யானைகளை காப்பாற்ற வேண்டுமென்றால் உடனடியாக வனப்பகுதியில் ஒட்டியுள்ள குப்பை கிடங்குகளை அகற்ற வேண்டும்.
யானைகளின் வலசை பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினால் மட்டுமே வரும் காலத்தில் யானைகளை காப்பாற்ற முடியும். அழிவின் விழும்பில் உள்ள யானைகளை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், “ குப்பை கிடங்குகளை அகற்ற பலமுறை சம்பந்தப்பட்ட ஊராட்சிகளுக்கு கடிதம் கொடுத்தும், குப்பை கிடங்கை இதுவரை அகற்றவில்லை. குப்பை கிடங்கை அகற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஊருக்குள் போகும் யானைகளை விரட்ட சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டுகின்றனர். மேலும், குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் வந்தால், உடனடியாக அங்கு செல்லும் வனத்துறையினர் யானைகளை விரட்டி வருகின்றனர்” இவ்வாறு அவர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:ஹாஸ்பிட்டல் வரும் 10ல் மூவருக்கு டெங்கு.. ஹைதராபாத்தில் அதிகரிக்கும் பாதிப்பு.. டாக்டர்கள் அட்வைஸ் என்ன?