மயிலாடுதுறை:மயிலாடுதுறையைச் சேர்ந்த தியாகி சாமி. நாகப்பன் படையாட்சி தென்னாப்பிரிக்காவில் சத்தியாகிரக போராட்டத்தில் பங்கெடுத்து சிறை சென்று உயிர்த்தியாகம் செய்தவர். அவரின் 115ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதன் நினைவஞ்சலி கூட்டம், மயிலாடுதுறையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்.குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறியதாவது, “இந்திய விடுதலை போராட்டத்தில் காந்தியடிகள் மேற்கொண்ட சத்தியாகிரகப் போராட்டத்திற்கு ஊக்கமளித்தவர் மயிலாடுதுறை தியாகி நாகப்பன் படையாச்சியார். காந்தியடிகள் சத்தியாகிரக போராட்டத்தை சோதனை முறையில் வடிவமைத்த இடம் தென்னாப்பிரிக்கா. நாகப்பன் படையாச்சியாரின் தியாகம்தான் காந்தியடிகள் போராட்டத்தை நடத்தி இந்தியாவிற்கு விடுதலை பெற்று தந்தார்.
பள்ளி பாடப் புத்தகத்தில் நாகப்பன் படையாச்சி:இதில் முதல் களப்பலியானவர் நாகப்பன் படையாச்சி. அதன்பிறகு 5 ஆண்டு கழித்து தான் தில்லையாடி வள்ளியம்மை இறந்தார். தில்லையாடி வள்ளியம்மை பெயரில் பல்வேறு நினைவுச் சின்னங்களை அரசு கொடுத்துள்ளது. ஆனால், முதலில் பலியான நாகப்பன் படையாச்சியாரின் தியாக வரலாறு மறைக்கப்பட்டுள்ளது. அவரது வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில், நாகப்பன் படையாச்சி வரலாற்றை பள்ளி பாடப் புத்தகத்தில் சேர்க்க வேண்டும்.
நாகப்பன் படையாச்சி சிலை:மயிலாடுதுறையில் முழுவுருவ வெண்கலச் சிலை அமைக்க வேண்டும். இங்கு புதியதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நியைத்திற்கு சாமி நாகப்படையாச்சி பெயர் சூட்ட வேண்டுமென்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். அரசு முன்முயற்சி எடுக்காத காரணத்தால் நாங்கள் எடுத்திருக்கிறோம். எந்தவித அரசியல் உள்நோக்கமும் இல்லை.