சென்னை:கேரளாவில் ரயில் விபத்தில் உயிரிழந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த துப்புரவுப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் 3 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
கேரள மாநிலம் பாரதப்புழா ஆற்றின் மேல் உள்ள பாலத்தில் ரயில்வே தடங்களைச் சுத்தம் செய்து கொண்டிருந்த போது தண்டவாளத்தின் வழியே வந்த கேரள எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 4 பேர் உடல் சிதறி பலியாகினார். இதில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் 4ஆவது நபரை தேடும் பணி தொடர்கிறது.
ஆற்றில் நீரோட்டத்தின் வேகம் அதிகமாக இருப்பதால் சிறப்பு நீச்சல் பயிற்சி பெற்ற குழுவினர் தொடர்ந்து தேடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நீரோட்டத்தின் வேகம் அதிகமாக இருப்பதால் மீட்புப் பணிகளில் சிரமம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்கள் சேலத்தைச் சேர்ந்த லட்சுமணன், வள்ளி, ராணி மற்றும் மற்றொரு லட்சுமணன் என்பது தெரியவந்துள்ளது.இந்தநிலையில் உயிரிழந்த துப்புரவுப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் 3 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:ஒரே நாளில் அடுத்தடுத்த இடங்களில் நடைபெற்ற சாலை விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு-சென்னை திருவொற்றியூரில் சோகம்!
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்," கேரளா மாநிலம், பாலக்காடு, ஷோரனூர், பாரதப்புழா பாலம் அருகில் நேற்று (02.11.2024) பிற்பகல் கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் ரயில் பாதையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த சேலம் மாவட்டம் மற்றும் வட்டம், ஆச்சாங்குட்டப்பட்டி, அடிமலை புதூர் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் (வயது 55), வள்ளி (வயது 45) ,காரைக்காடு, டி.பெருமாள் பாளையத்தைச் சேர்ந்த லட்சுமணன் (வயது 45) , மற்றும் அல்லிக்குட்டையைச் சேர்ந்த ராஜம்மாள் (வயது 43) ஆகிய நால்வரும் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என தெரிவித்துள்ளார்.