தாக்குதல் நடந்த வந்த இளைஞர்களின் சிசிடிவி காட்சி (credits - ETV Bharat Tamil Nadu) கோயம்புத்தூர்: சிங்காநல்லூர் SIHS காலனி பகுதியில் இளைஞர்கள் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும், இதனால் பொதுமக்கள் நடமாட முடியாத சூழல் நிலவுவதாகவும், சில நேரங்களில் அங்கு வரும் இளைஞர்கள் பணம் கேட்டு வழிப்பறியில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.
இதனால், அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் மிகுந்த அச்சத்துடன் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில், சிங்காநல்லூர் SIHS காலனி பகுதியில் வசித்து வரும் வீரலட்சுமி என்பவர் தனக்கும், தனது குடும்பத்திற்கும் கொலை மிரட்டல் வருவதாக கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
இது குறித்து வீரலட்சுமி கூறுகையில், “நாங்கள் சிங்காநல்லூர் SIHS காலனி பகுதியில் வசித்து வருகிறோம். எனக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சில நாட்களுக்கு முன்பாக தனது மகனை, இப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்யும் இளைஞர்கள் சிலர் வழிமறித்து பணம் கேட்டு தகராறில் ஈடுப்பட்டுள்ளனர். இது குறித்து கடந்த ஏப்ரல் மாதம் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். இதனால் ஆத்திரம் அடைந்த கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள், தனது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக கஞ்சா விற்பனை செய்யும் இளைஞர்கள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீட்டை நோட்டமிட்டு வருகின்றனர். தனது குடும்பத்தினரைத் தாக்க முயற்சி செய்கின்றனர். இதனால் மாலை 6 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், எனது மகன்கள் வேலைக்கும் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது.
அஜய் மற்றும் ஜெயா ஆகியோர் இப்பகுதியில் போதைப்பொருள் விற்று வருகின்றனர். இவர்களால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே, எங்களது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வேண்டும். இது குறித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
இதனையடுத்து, இது குறித்து SIHS காலனியைச் சேர்ந்த தாமஸ் சாகு கூறுகையில், “இப்பகுதியில் உள்ள அஜய் மற்றும் ஜெயா என்பவரின் வீட்டுப் பகுதியில் எப்பொழுதும் 50க்கும் மேற்பட்டோர் இருக்கின்றனர். இவர்கள் கஞ்சா விற்பதோடு, வழிப்பறியிலும் ஈடுபடுகின்றனர். இது குறித்து நாங்கள் வாய்மொழி புகார் அளித்ததால், வீரலட்சுமி மகன்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இதனால் மீண்டும் புகார் அளித்தோம். இந்நிலையில், அவர்களது கும்பலைச் சார்ந்த இளைஞர்கள் சிலர், கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு வீட்டிற்குள் நுழைய முயற்சிக்கின்றனர். வீட்டைச் சுற்றி அவ்வப்போது இருசக்கர வாகனத்தில் வந்து செல்கின்றனர். இதனால் எங்களால் வெளியில் செல்ல முடியாத நிலை உள்ளது.
மேலும், தொலைபேசி மூலமாக எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். இதுவரை 4 முறை வீட்டிற்குள் நுழைய முயற்சித்துள்ளனர். கடந்த 2 மாதங்களாக இந்த பிரச்னை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். தற்போது இளைஞர்கள் ஆயுதங்களுடன் அப்பகுதியில் சுற்றித் திரிவதும், வீட்டிற்குள் நுழையும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்துகள்: 4 குழுக்கள் அமைத்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு! - Sivakasi FireCracker Explosion