சென்னை:தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அந்த வகையில், சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் கடும் அவதிகுள்ளாகினர்.
இந்தநிலையில் சென்னை நெற்குன்றம் 148வது வார்டு புவனேஸ்வரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் தேவி ((37). இவர் கோயம்பேடு, சின்மயா நகர் பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார். இவர் நேற்று மாலை வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது சாலை ஓரம் அமைந்திருந்த அகண்ட கால்வாய் வழியே சென்றுள்ளார்.
கால்வாயில் தவறி விழுந்த பெண் மீட்பு (ETV Bharat Tamil Nadu) அப்போது சாலையில் இருந்த சேறு வழுக்கியதால் சுமார் 40 அடி அகலமும் 15 அடி ஆழமும் கொண்ட கால்வாயில் தவறி விழுந்தார். இதனையடுத்து உயிருக்கு போராடிய நிலையில் கூச்சலிட்ட தேவியை கண்ட அக்கம் பக்கத்தினர், இது குறித்து காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:தூத்துக்குடியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 5 வீடுகள்; பொதுமக்கள் சாலை மறியல்!
இதையடுத்து அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த ஆயுதப்படை போலீசார், பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் கால்வாயில் சிக்கி இருந்த தேவியை பத்திரமாக மீட்டனர். தவறி விழுந்ததில் உடலில் சிறிய காயங்கள் ஏற்பட்டதால் தேவி அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். உயிருக்கு போராடிய பெண்ணை மீட்ட காவல் துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.