தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள எப்போதும் வென்றான் கீழத்தெருவைச் சேர்ந்தவர் வைரமுத்துவின் மனைவி சின்னமணி (35). இவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூய்மைப் பணியாளராக ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்துள்ளார்.
இவரது கணவர் வைரமுத்து கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு இறந்த நிலையில், தனது இரு குழந்தைகளான முத்துகாட்டுராஜ், முத்துதிவ்யா ஆகியோருடன் தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டையில் வசித்து வந்துள்ளார், சின்னமணி. சின்னமணியின் கணவர் வைரமுத்துவின் உடன் பிறந்த தம்பியான ராஜேஷ் கண்ணன் (20) எப்போதும் வென்றானில் வசித்து வந்துள்ளார்.
சின்னமணிக்கு, ராஜேஷ் கண்ணன் மற்றும் சிலருடன் முறையற்ற உறவு இருந்ததாகவும், மற்ற நபர்களுடன் இருந்த உறவை துண்டிக்கச் சொல்லி ராஜேஷ் கண்ணன் சின்னமணியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சின்னமணி நேற்று (மார்ச் 15) காலை தனது ஊரான எப்போதும் வென்றானில் ரேஷன் பொருட்களை வாங்குவதற்காக வந்துள்ளார்.
அதை வாங்கிவிட்டு, தாத்தா வீட்டில் இருந்த மகள் முத்துதிவ்யாவை அழைத்துக் கொண்டு, மீண்டும் ஊருக்கு வருவதற்காக எப்போதும் வென்றான் பேருந்து நிறுத்தத்திற்கு வந்துள்ளார். அப்போது, பேருந்துக்காக காத்திருந்த சின்னமணியை, அங்கு வந்த ராஜேஷ் கண்ணன் சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் சின்னமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.