சென்னை:சுற்றுலா வேன்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், சென்னையிலிருந்து குடும்பத்துடன் சுற்றுலா வந்த பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விபத்தில் படுகாயமடைந்த குழந்தைகள் உட்பட 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை மாவட்டம், கொடுங்கையூரை சேர்ந்தவர் சகாயராஜ் (38), இவர் தங்க நகைகள் செய்யும் தொழிலை மேற்கொண்டு வருகிறார். இவர் 11 பேர் கொண்ட தனது குடும்பத்தினருடன் சேர்ந்து சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று (ஏப்.29) காலை சென்னையிலிருந்து புறப்பட்ட குடும்பத்தினர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
தொடர்ந்து, இன்று (ஏப்.30) காலை திருச்செந்தூரில் இருந்து டெம்போ வேனில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா செல்வதற்காகப் புறப்பட்டுள்ளனர். இதையடுத்து வாகனம் கல்லாமொழி, பள்ளிவாசல் நுழைவாயில் எதிரே சென்று கொண்டிருந்தபோது, எதிரே ஆளில்லாமல் வந்த மற்றொரு வேன் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது, இதில் டெம்போ வேன் உருண்டு ஓடியது.