புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே மஞ்சுவிடுதி கிராமத்தைச் சேர்ந்த பரிமளேஸ்வரன், கலைமணி தம்பதிக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து, கலைமணி பெண் சுகாதார தன்னார்வலராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில், சமீபத்தில் கலைமணி கர்ப்பமடைந்துள்ளார். அதன் பிறகு, கணவர் பரிமளேஸ்வரன் வெளிநாட்டிற்கு வேலைக்காகச் சென்றுள்ளார். இதனை அடுத்து, கலைமணி 5 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், ஏற்கனவே இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளதால், மீண்டும் உருவான கருவில் இருப்பது என்ன குழந்தை என்பதை அறிந்துகொள்ள முடிவெடுத்ததாக தெரிவிக்கின்றனர்.
அதன் அடிப்படையில், நேற்று முன்தினம் (ஆக.14) பொன்னமராவதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றிற்குச் சென்று கருவில் இருப்பது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என பரிசோதித்ததாகவும், இந்த சட்ட விரோதமான பரிசோதனையின் மூலமாக, மருத்துவர்கள் கருவில் இருப்பது பெண் குழந்தை என உறுதி செய்ததாகவும் கூறப்படுகிறது.
அதனை அடுத்து, பரிமளேஸ்வரன் - கலைமணி தம்பதி வயிற்றில் இருக்கும் கருவை கலைப்பதற்கு முடிவு செய்ததாகவும், அதன் தொடர்ச்சியாக, வயிற்றில் நன்கு வளர்ச்சி அடைந்திருந்த 5 மாத கருவை கலைக்க வெளிநாட்டில் இருந்த கணவர் பரிமளேஸ்வரன் ஒப்புதலோடு, மருத்துவர்கள் கருக்கலைப்பு முயற்சியில் ஈடுபட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இத்தகையச் சூழலில், கலைமணி கருக்கலைப்பின் போது உயிரிழந்ததாக சம்பந்தப்பட்ட மருத்துவமனை தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து, கலைமணியின் உறவினர்கள் மருத்துவர்கள் தங்களிடம் ஆலோசனை பெறாமல் கருக்கலைப்பு செய்ததாக குற்றம் சாட்டி, மருத்துவமனையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.