காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சிறு காவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் டில்லிராணி (31). இவர் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் மேகநாதன் கம்ப்யூட்டர் பாகங்கள் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த ஆறு மாத காலமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பெண் காவலர் டில்லிராணி, இன்று மதியம் பணி முடிந்து சங்கர மடம் சாலை தெரு வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது இந்தியன் வங்கி அருகே அவரது கணவர் மேகநாதன் தடுத்து நிறுத்தி காவலர் டில்லிராணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் மேகநாதன் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு, அக்கம் பக்கத்தினர் வருவதைப் பார்த்து விட்டுத் தப்பி ஓடிவிட்டார். வெட்டுக் காயங்களுடன் துடிதுடித்த டில்லிராணியை அங்கிருந்தவர்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காஞ்சிபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு தப்பி ஓடிய மேகநாதன் தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள முக்கிய சாலையில் நடைபெற்ற இச்சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:முன்னாள் காதலிக்கு பிறந்தநாள்.. நள்ளிரவில் போன் போட்டு உயிரை பறிகொடுத்த இளைஞர்.. ஈரோடு பகீர் சம்பவம்!