புதுக்கோட்டை:ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்றும்படி தமிழக அரசு கோரிக்கை விடுக்கப்படுமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அது போல கோரிக்கை விடுக்கமாட்டோம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார்.
புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்திருந்தபோது செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "கோவை குண்டு வெடிப்பு வழக்குகளில் தொடர்புடைய பாட்ஷாவின் இறுதி ஊர்வலத்தில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படக்கூடாது என்பதற்காக, கூடுதல் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. அதில் தவறில்லை.
ரவுடிகளுக்கும், சமூக விரோதிகளுக்கும் பல்வேறு வழக்குகளில் சிக்கியிருப்பவர்களுக்கும் பதவி கொடுப்பதும், கட்சியில் சேர்த்துக் கொள்வதும் அகில இந்திய அளவில் பாஜக மட்டுமே. இது குறித்து பல முறை ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. வேண்டுமென்றால் மீண்டும் ஒரு பெயர் பட்டியலை தர தயாராக இருக்கிறோம். திமுகவில் இதுபோன்று தெரியாமல் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் இருந்தால் அவர்கள் மீது தலைவர் நடவடிக்கை எடுப்பார்.
திருநெல்வேலியில் நீதிமன்றத்துக்கு வெளியே நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் சம்பவம் நடந்து இரண்டு மணி நேரங்களில் கைது செய்யப்பட்டனர். இதற்கு காவல்துறையை பாராட்ட வேண்டும். குற்றச்சம்பவங்களை நடக்கும்போது அதை யாராலும் தடுக்க முடியாது. நடந்த பின்னர் அதன் பேரில் கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் மட்டுமே எடுக்க முடியும்.
இதையும் படிங்க:நெல்லையில் மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம்.. சேரன்மாதேவியில் சட்டக் கல்லூரி மாணவர் கத்தியால் குத்தி கொலை!
சட்ட ஒழுங்கு சரியில்லை என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். அம்பேத்கர் அவமதிப்பு விவகாரத்தில் நேரடியாக பதில் சொல்வாரா? என தெரிந்து கொள்ள நினைக்கின்றேன். இந்த விஷயத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்துதான் என் கருத்து என்று எடப்பாடி கூறுகிறார். ஒரு விஷயத்தில் சொந்தக் கருத்தைக்கூட சொல்ல முடியாமல் ஏன் இவர் அதிமுகவின் பொதுச்செயலாளராக இருக்கிறார். பொங்கல் தினத்தன்று UGC நெட் தேர்வு நடைபெறுவதற்கு நிச்சயமாக எதிர்ப்பு தெரிவிப்போம்.
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி (credits-Etv Bharat Tamilnadu) பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமிப்பது குறித்த தேர்வு குழுவில் மாநில அரசு சட்டப்படி செயல்படுகிறது. மூன்று பேர் தான் அந்த தேர்வு குழுவில் இருக்க வேண்டும், நான்காவது நபரை நியமிக்க வேண்டுமென ஆளுநர் கூறுகிறார். அதற்கு சட்டத்தில் இடம் இல்லை. இதுகுறித்து நீதிமன்றத்திற்கு செல்லும்போது எங்களுடைய வாதத்தை எடுத்து வைப்போம்.ஆளுநரை நாங்கள் மாற்ற வற்புறுத்தினால், அவர் இன்னும் வலுவோடு அதே பதவியில் நீடிப்பார். எனவே அவரை மாற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்க மாட்டோம். ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே வார்த்தை மோதல் இருப்பது இயற்கை.
ஆளுநர் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார் என்று நாங்கள் நினைக்கவில்லை, அவர் தொலைபேசி மூலம் முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்ததால் தேநீர் விருந்தில் கலந்து கொண்டோம். வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் முன்பு நடந்தது போன்று அவர் நடந்து கொள்ளமாட்டார் என்று நினைக்கின்றோம். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தைப் பொறுத்தவரை இரண்டுமுனை போட்டி தான் அமையும். வேண்டுமென்றால் மூன்றாவது அணி ஒன்று அமைக்கப்படலாம் என்று நினைக்கின்றேன். திராவிட கட்சிகளுக்குத்தான் தமிழகத்தில் மரியாதை உள்ளது. குறிப்பாக திமுகவிற்கு அதிகமான செல்வாக்கு உள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து தமிழக முதல்வர் முடிவு செய்வார். பாஜக கூட்டணிக்கு அதிமுகவை டிடிவி தினகரன் அழைப்பது, அதிமுகவிற்கு கொடுக்கக்கூடிய எச்சரிக்கையாக கூட இருக்கலாம்,"என்றார்.