ஈரோட்டில் லாரியை வழிமறித்து கரும்பு ருசித்த காட்டு யானை ஈரோடு:சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் கரும்பு அறுவடை செய்யப்பட்டு சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகிறது. இந்த கரும்பு லாரிகள் அடர்ந்த வனப்பகுதி வழியான சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக ஆலைக்கு செல்கின்றன.
இவ்வாறு ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகளை வழிமறித்து, காட்டு யானைகள் கரும்பு சுவைப்பது அவ்வப்போது நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நேற்று (மார்ச்.20) கரும்பு பாரம் ஏற்றிய லாரி, சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில், ஆசனூர் அடுத்துள்ள காரப்பள்ளம் சோதனைச்சாவடி பகுதியில் சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது, வனப்பகுதியிலிருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று கரும்பு லாரியை வழிமறித்துள்ளது. இதனால், அச்சமடைந்த லாரி ஓட்டுநர் உடனடியாக லாரியை நிறுத்தியுள்ளார்.
இதனால், அச்சாலையில் வந்த மற்ற வாகனங்களும் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றுள்ளது. கரும்பு லாரியை வழிமறித்த ஒற்றை கட்டு யானை, லாரியில் இருந்த கரும்பு துண்டுகளைப் பறித்து, அவற்றைக் கீழே சாலையில் போட்டு ஒவ்வொரு துண்டாக எடுத்துச் சுவைத்துள்ளது. இதனைக் கண்ட வாகன ஓட்டுநர்கள் வாகனங்களை நகர்த்தாமல் சிறிது நேரத்திற்கு அங்கேயே நிறுத்தி வைத்துள்ளனர்.
சிறிது நேரம் லாரியை வழிமறித்த காட்டு யானை, தேவையான கரும்புகளை எடுத்துக் கொண்டு சாலை ஓரம் சென்றதையடுத்து, அப்பகுதியில் அணிவகுத்து நிறுத்தப்பட்ட வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில், யானை கரும்பு தின்னும் காட்சியை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். தற்போது இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: மத்திய இணை அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க கர்நாடக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு உத்தரவு!