தஞ்சாவூர்:கும்பகோணம் அருகேயுள்ள தேப்பெருமாநல்லூர் ஏகேவி நகரில் வசித்து வருபவர் ஹரிபாரதிதாஸ், இந்திரா ஆகியோரின் மகன் ரோக்கேஷ் (43). இவர் சிங்கப்பூரில் கணினி பொறியாளராக பணியாற்றி வந்த நிலையில், இவருக்கும், கும்பகோணம் பழைய அரண்மனைத்தெருவை சேர்ந்த மணிராவ் ராஜன் - நிர்மலா தம்பதியினரின் இளைய மகள் திவ்யா (35) என்பவருக்கும் கடந்த 2013 ஆம் ஆண்டு முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது.
தற்போது இவர்களுக்கு தீப்தா என்ற 6 வயது மகள் உள்ளார். இதில் திவ்யா நாம் தமிழர் கட்சி கும்பகோணம் மாநகரில் உறுப்பினராக செயல்பட்டு, மாநகராட்சி தேர்தலிலும் அந்த கட்சி சார்பாக போட்டியிட்டு தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடதக்கது.
ரோக்கேஷ் சிங்கப்பூரில் பணியாற்றி வந்த காலகட்டத்தில் அவரை சந்திக்க சிங்கப்பூர் சென்று வரும் திவ்யா சிறுக சிறுக சுமார் 200 சவரன் தங்க நகைகளை கணவரிடமிருந்து வாங்கி வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கணவர் ரோக்கேஷ் வங்கி கணக்கிலிருந்து அனுப்பிய 2 கோடியே 81 லட்சம் பணத்தில் திவ்யா, தனது பெயரிலும், தனது பெற்றோர் பெயரிலும் சொத்துக்களாக வாங்கி கொண்டதாக அவரது கணவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், திவ்யாவிற்கு, அரசு மதுபான கடை பாரில் சப்ளையராக பணி செய்யும் இன்னம்பூர் மேலத்தெருவை சேர்ந்த நந்தகுமார் என்ற தன்னை விட 5 வயது குறைவான வாலிபருடன் திருமணம் மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர் கடந்த 2021ம் ஆண்டு முதல் கணவர் ரோக்கேஷிடம் விவாகரத்து கோரியுள்ளார் திவ்யா. இது தொடர்பான வழக்கு நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்தநிலையில் திவ்யாவிற்கு நந்தகுமாருக்கு ஏற்பட்ட திருமணம் தாண்டிய உறவின் காரணாமக கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 07ம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையின் பிறப்பு சான்றிதழில் கணவர் பெயராக நந்தகுமார் பெயரே குறிப்பிடப்பட்டுள்ளது.