தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தருமபுரி சிட்டிங் எம்பி செந்தில்குமாருக்கு சீட் மறுக்கப்பட்டது ஏன்?

Dharmapuri DMK Candidate: நாடாளுமன்றத் தேர்தலில் திமுக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட நிலையில், அதில் தருமபுரி சிட்டிங் எம்பி செந்தில்குமாருக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 20, 2024, 2:56 PM IST

DMK MP Senthilkumar
DMK MP Senthilkumar

தருமபுரி:சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான பட்டியலை முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அதில், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமாருக்கு சீட் மறுக்கப்பட்டு, ஆ.மணி என்ற வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாமகவின் கோட்டையாக கருதப்படும் தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை எதிர்த்துப் போட்டியிட்ட செந்தில்குமார், 70,753 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தருமபுரியின் 17வது நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

முழு நேர மருத்துவராக பணியாற்றி வந்த செந்தில்குமார் எம்பியாக தேர்வு செய்யப்பட்டபின், மக்கள் நலப் பணிகளிலும் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு, தொப்பூர் பகுதியில் தொடர் விபத்து ஏற்படுவதைத் தடுக்க உயர் மேம்பாலம் அமைக்க வேண்டும் என தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தியதின் பேரில், தற்போது 905 கோடி மதிப்பீட்டில் உயர் மேம்பாலம் அமைப்பதற்கான பூமி பூஜை போடப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்ட மக்களின் 75 ஆண்டு கனவுத் திட்டமான தருமபுரி - மொரப்பூர் இணைப்பு ரயில் திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் பெற்றுக் கொடுத்தார். அதேபோல், தருமபுரி இரட்டை ரயில் பாதை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை பெற்றுக் கொடுத்தார்.

இருப்பினும், ஒகேனக்கல் 2-ஆம் கட்ட கூட்டுக் குடிநீர்த் திட்டம், தருமபுரி மாவட்டம் சிறுதானிய மண்டலமாக அறிவிக்கப்படும், பொம்மிடி- தருமபுரி இணைப்பு சாலை திட்டம் உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற குற்றம்சாட்டும் இருந்து வருகிறது.

சரிந்தது எங்கே?:டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்தாலும், எதிர்கட்சிகளை வம்பு இழுப்பதிலும், சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவிப்பதிலும் குறைவில்லாமல் இருந்தார். குறிப்பாக, கடந்த வருடம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற பூமி பூஜையில், அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களும் பூமி பூஜையில் வாய்ப்பு அளிக்க வேண்டும் எனப் பேசி, அவர் நடந்து கொண்ட வீடியோ சர்ச்சையானது.

அதேபோல் நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரின் போது 'இந்தி பேசும் மாநிலங்களை நாங்கள் பொதுவாக கோமூத்திர மாநிலங்கள் என்று அழைப்போம். அங்கு நடக்கும் தேர்தல்களில் பாஜகவுக்கு மட்டுமே வெற்றி கிடைக்கிறது' என பேசியதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுபோல், அவ்வப்போது சர்ச்சையான பேச்சுக்களால் பேசுபொருளானது, திமுக தலைமைக்கு பிரச்னையாக உருவெடுத்தது. அதுமட்டுமல்லாமல், கட்சி நிர்வாகிகளும் இவர் மீது அதிருப்தி தெரிவித்து இருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த முறை சிட்டிங் எம்பி செந்தில் குமாருக்கு சீட் என பலரும் நினைக்க, புதிய வேட்பாளரை அறிவித்துள்ளது திமுக தலைமை. இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஸ்டாலின் - தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டார்

ABOUT THE AUTHOR

...view details