புதிய உச்சத்தை தொட்ட மஞ்சள் விலை.. ஈரோடு சந்தையில் ரூ.18 ஆயிரம் வரை விற்பனை! ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்கு விற்பனைக்கூடம், ஈரோடு மற்றும் கோபி கூட்டுறவு சங்கம் ஆகிய நான்கு இடங்களில் மஞ்சள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. திங்கள் முதல் வெள்ளி வரை இங்கு ஏல விற்பனை நடந்து வருகிறது.
கடந்த 13 ஆண்டுகளாக மஞ்சள் விலை குவிண்டாலுக்கு 5,000 முதல் 6,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு தொடக்கத்தில் பல்வேறு மாநிலங்களில் பலத்த மழை, சில மாநிலங்களில் போதிய மழை இல்லாத போன்ற காரணங்களால் மஞ்சள் உற்பத்தி குறைந்து, ஈரோடு மஞ்சள் குவிண்டால் 15,000 ரூபாய் முதல் 15,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
பின்னர் படிப்படியாக உயர்ந்து, மீண்டும் குவிண்டால் 16,000 ரூபாய் வரை விற்பனையானதால், மஞ்சள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில், ஈரோடு மஞ்சள் விற்பனை மையத்தில் புதிய ரக கிழங்கு மஞ்சள் 14,419 ரூபாய் முதல் 17,699 ரூபாய் வரையிலும், பழைய இருப்பு கிழங்கு மஞ்சள் 10,859 ரூபாய் முதல் 15,811 ரூபாய் வரையிலும், விரலி மஞ்சள் 10,059 ரூபாய் முதல் 14,859 ரூபாய் வரையிலும் விற்பனை ஆகி வருகிறது.
மேலும், கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவு மஞ்சள் விற்பனை அதிகரித்து காணப்பட்டு வருவதால் விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேசமயம், வரும் ஆண்டுகளில் மஞ்சள் உற்பத்தி அதிகரிக்கக்கூடும் எனவும், இந்த விலை ஏற்றம் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் வியாபாரிகளும், விவசாயிகளும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:"மகள் இலக்கை நோக்கிப் பயணிக்கப் பெற்றோர் உறுதுணையாக இருக்க வேண்டும்" - துப்பாக்கி சுடு வீராங்கனை சுமன் குமாரி!