கோயம்புத்தூர்:தடாகம் பகுதியில் சட்டவிரோத செங்கல் சூளைகளால் ரூபாய் 373 கோடி அளவில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட சிறப்புக் குழு அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து 6 மாதங்களில் குழு அமைத்து மீண்டும் ஆய்வு செய்யுமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாமல் அரசாங்கம் அலட்சியம் காட்டி வந்தது.
இந்நிலையில், இன்று (மார்ச்.14) இந்த வழக்கை விசாரித்த தென் மண்டல பசுமை தீர்ப்பாய நீதித்துறை, மாநில அரசுக்கு அதிகாரம் இருந்தும் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம், தடாகம் பகுதியில் சட்டவிரோதமாகக் கனிமவளக் கொள்ளை நடைபெறுவதாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்த தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட ஆட்சியரைக் கொண்ட சிறப்புக் குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.
இந்த குழு சட்டவிரோத செங்கல் சூளைகளால் 373 கோடி ரூபாய் அளவில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிட்டது. இதையடுத்து சட்டவிரோத செங்கல் சூளைகளுக்கு 59 கோடி ரூபாய் அபராதம் விதித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது.