தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பரிதாபமான 'பரிதாபங்கள்' குழு... லட்டு பாவங்கள் போட்டு பகிரங்க மன்னிப்பு.. என்னதான் நடந்தது? - parithabangal laddu video issue

திருப்பதி லட்டு குறித்து லட்டு பாவங்கள் வீடியோ வெளியிட்டிருந்த பரிதாபங்கள் குழு, அந்த வீடியோவையோ திடீரென யூடியூபில் இருந்து நீக்கியதோடு வருத்தமும் தெரிவித்துள்ளது.

பரிதாபங்கள் கோபி, சுதாகர் மற்றும் லட்டு
பரிதாபங்கள் கோபி, சுதாகர் மற்றும் லட்டு (Credits - Gopi 'X' Page and ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 25, 2024, 1:23 PM IST

Updated : Sep 25, 2024, 2:19 PM IST

சென்னை: திருப்பதி லட்டுவில் விலங்குகள் கொழுப்பு கலந்திருப்பதாக, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியது ஏழுமலையான் பக்தர்களை பதற வைத்தது. அதனை தொடர்ந்து திருப்பதி லட்டுவை ஆய்வுக்கு அனுப்பிய தேவஸ்தானம், லட்டுவில் மாட்டு கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலந்திருப்பதாக உறுதி செய்தது.

நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரம், சோசியல் மீடியாவில் மீம்ஸ் கண்டெண்ட்டாகவும் மாறியது. இந்த ட்ரெண்டை பயன்படுத்திக்கொண்ட யூடியூபர்ஸ் பலர், திருப்பதி லட்டு எப்படி தயாரிக்கப்படுகிறது? லட்டுவின் ஆய்வறிக்கையில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்ற தலைப்புகளில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், பிரபல யூடியூப் சேனலான பரிதாபங்கள், லட்டு பாவங்கள் என்று வீடியோ வெளியிட்டிருந்தது. ஆனால், அந்த வீடியோவை பரிதாபங்கள் சேனல் திடீரென நீக்கிவிட்டதால் சக்ஸ்க்ரைபர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

யூடியூபில் 57 லட்சம் சப்ஸ்க்ரைபர்களை கொண்டுள்ள பரிதாபங்கள், தமிழக யூடியூபர்களிடையே பிரபல சேனலாக இருந்து வருகிறது. நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை, நகைச்சுவை கலந்து யதார்த்தமாக இந்த சேனல் வீடியோ வெளியிட்டு வருகிறது. ஒவ்வொரு வீடியோவும் மில்லியன் வியூவ்ஸை கடப்பதோடு சோஷியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகியும் வருகிறது.

இந்த நிலையில், இந்த சேனல் வெளியிட்டிருந்த லட்டு பாவங்கள் வீடியோவில், லட்டுவில் மாட்டு கொழுப்பு கலந்த செய்தியை கேட்டு சைவ பிரியர்கள் கொடுக்கும் ரியாக்ஷன் எப்படி இருக்கும்? மாட்டு இறைச்சி சாப்பிடுபவர்கள் கையில் இந்த லட்டுவை கொடுத்தால் எதிர்வினையாற்றுவார்களா? கோயில் புனிதம் கெட்டுவிடக்கூடாது என்பதற்காக பக்தர்களுக்கு கடுமையான விதிமுறைகள் போடும் தேவஸ்தானமே, கலப்படமுள்ள லட்டுவை பக்தர்களுக்கு வழங்கி இருப்பது என்ன நியாயம் என்ற கோணங்களில் அந்த வீடியோவை, பரிதாபங்கள் சேனல் வழக்கமான முறையில் நகைச்சுவை கலந்து வெளியிட்டிருந்தது.

இதையும் படிங்க:ஆதவ அர்ஜூனா பேச்சு உட்கட்சி விவகாரம்! ஆ.ராசாவுக்கு திருமாவளவன் காட்டமான பதில்

மேலும், சைவம் மட்டுமே சாப்பிடும் ஒருவர் அசைவம் சாப்பிடுபவர்களை ஏளனமாக பார்ப்பது, தள்ளி செல்வது போன்ற காட்சிகளையும், திருப்பதி லட்டு பிரசாதமாகவே இருந்தாலும் அதனை பல பேர் சேர்ந்து தயாரிப்பதால் தீட்டாக எண்ணி சிலர் சாப்பிட மறுப்பதையும் அந்த வீடியோவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக, திருப்பதி லட்டுவில் கலப்படம் இருப்பதை உறுதி செய்த உடன் தேவஸ்தானம் உட்பட யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறதோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், பரிகார பூஜை செய்யப்போவதாக அம்மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் கூறியதையும் அந்த வீடியோவில் விமர்சிக்கப்பட்டுள்ளது. கடைசியில், லட்டுவில் கலப்படம் இருப்பதெல்லாம் ஒரு விஷயமா? சாப்பிட்டுவிட்டு அடுத்த வேலையை பாருங்க.. என்பதை போல அந்த வீடியோவை முடிக்கின்றனர்.

ஆனால், அந்த வீடியோவை பரிதாபங்கள் குழு திடீரென டெலிட் செய்துள்ளதால் சோஷியல் மீடியாவில் அதுகுறித்த விவாதம் கிளம்பியுள்ளது. இந்நிலையில், இதற்கு விளக்கம் அளித்து பரிதாபங்கள் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், '' கடைசியாக பரிதாபங்கள் சேனலில் வெளிவந்த வீடியோ முழுக்க நகைச்சுவைக்காக உருவாக்கப்பட்டது. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படவில்லை. அதையும் மீறி சிலர் மனம் புண்பட்டிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்து சம்பந்தப்பட்ட காணொளியை நீக்கி உள்ளோம். இதுபோல வருங்காலங்களில் நடைபெறாது என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்'' என கூறியள்ளது.

இதற்கிடையே, பரிதாபங்கள் டெலிட் செய்த அந்த வீடியோவை முன்கூட்டியே பலர் டவுன்லோட் செய்து வைத்துக்கொண்டு இப்போது பகிர்ந்து வருகின்றனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

Last Updated : Sep 25, 2024, 2:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details