சென்னை: வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து குவித்தாக அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி ஆகியோர் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று அந்த வழக்கில் இருவரும் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து இந்த உத்தரவு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று (பிப்.29) நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் வந்தது. அமைச்சர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ரமேஷ், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்குப் பின் பழிவாங்கும் நோக்கில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நியாயமான விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஆதாரங்களைப் புறக்கணித்து விட்டு வழக்குத் தொடர்வது எப்படி நியாயமான விசாரணையாகக் கருத முடியும்.
வழக்குப்பதிவு செய்யும் முன் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிக் கணக்கைப் பரிசீலித்திருக்க வேண்டும். வழக்கில் முதல் புலன் விசாரணை அதிகாரி சேகரித்த ஆதாரங்களை மாற்றாமல், கூடுதல் ஆதாரங்களைச் சேர்ப்பது மறு விசாரணை அல்ல, மேல் விசாரணை தான். இந்த மேல் விசாரணையும், காவல் கண்காணிப்பாளரின் ஒப்புதலைப் பெற்றே மேற்கொள்ளப்பட்டது.
மேல் விசாரணைக்குப் பின், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் இல்லை என வழக்கை முடித்து அறிக்கை தாக்கல் செய்தால், சம்பந்தப்பட்ட நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்கலாம். அதற்குச் சம்பந்தப்பட்ட நீதிபதிக்கு எந்தத் தடையும் இல்லை என வாதிட்டார்.