தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் தட்டுப்பாடு ஏன்? - தமிழக அரசு விளக்கம்! - tn ration shop - TN RATION SHOP

Tn Ration Shop Food Items Scarcity: நியாய விலைக் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் தட்டுப்பாட்டுக்கான காரணம் என்ன என்பது குறித்து விளக்கம் அளித்துள்ள தமிழக அரசு, மே மாதத்துக்கான இப்பொருட்களை நுகர்வோர் எப்போது பெற்றுக் கொள்ளலாம் என்பது பற்றியும் அறிவித்துள்ளது.

மின்னணு ரேஷன் அட்டை (கோப்புப் படம்)
மின்னணு ரேஷன் அட்டை (கோப்புப் படம்) (Photo Credit - Etv Bharat Tamilandu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 28, 2024, 3:24 PM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இயங்கிவரும் ஆயிரக்கணக்கான நியாய விலை கடைகள் மூலம், ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் அரிசி, துவரம் பருப்பு, சர்க்கரை, கோதுமை. பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் குறைந்த விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த லட்சணக்கானோர் இதன் மூலம் பயனடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக ரேஷன் கடைகளில் பாமாயில், துவரம் பருப்பு ஆகிய அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், குறித்த நேரத்தில் இவை தங்களுக்கு விநியோகம் செய்யப்படுவதில்லை என்றும் நுகர்வோர் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்தது.

பல்வேறு மாவட்டங்களில் பரவலாக இந்த குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இதுதொடர்பாக, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச செயலாளர் இன்று விளக்கம் அளித்துள்ளார், இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பொது விநியோகத் திட்ட குடும்ப அட்டைதாரர்கள் மே மாதத்திற்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பை, ஜுன் மாதம் முதல் வாரம் வரை பெற்றுக் கொள்ளலாம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில்,'தமிழ்நாடு அரசு, சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30க்கும், ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25க்கும் மானிய விலையில் வழங்கி வருகிறது.

நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக பாமாயில் மற்றும் துவரம் பருப்புக்கான ஒப்பந்தப்புள்ளிகள் மீதான முடிவுகள் மேற்கொண்டு அப்பண்டங்களைக் கொள்முதல் செய்வதில் காலதாமதம் நேரிட்டது. இருப்பினும் அரசின் தொடர் முயற்சிகள் காரணமாக, விநியோகப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, மே 27-ம் தேதி, 82,82,702 குடும்ப அட்டைதாரர்களுக்குத் தலா ஒரு கிலோ துவரம் பருப்பும், 75,87,865 குடும்ப அட்டைதாரர்களுக்குத் தலா ஒரு லிட்டர் பாமாயில் பாக்கெட்டும் நியாயவிலைக் கடைகளின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. 24,96,510 கிலோ துவரம் பருப்பு மற்றும் 33,57,352 பாமாயில் பாக்கெட்டுகள் நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுச் செல்ல தயார் நிலையில் உள்ளன.

8,11,000 கிலோ துவரம் பருப்பு மற்றும் 7,15,395 பாமாயில் பாக்கெட்டுகள் கிடங்குகளில் நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பும் பொருட்டு இன்றைய தேதியில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. மீதம் பெற வேண்டிய துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஒப்பந்ததாரர்களிடமிருந்து பெற்று விரைவாக கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாத ஒதுக்கீட்டினை இம்மாத இறுதிக்குள் வழங்கிட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் மே மாதத்தில் பருப்பு மற்றும் பாமாயில் பெற முடியாதவர்கள் வசதிக்காக ஜுன் மாதம் முதல் வாரம் வரை நியாயவிலைக் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற்றுக் கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளும்படி மாவட்ட வழங்கல் அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

குடும்ப அட்டைதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மே மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட் பெற இயலாத அட்டைதாரர்கள், இவற்றை ஜுன் மாதம் முதல் வாரத்தில் பெற்றுக் கொள்ளலாம்' என்று துறை முதன்மைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:“ரேஷனில் பாமாயில், பருப்பு கூட கிடைக்கவில்லை..” திருவாரூர் மாவட்ட மக்கள் குற்றச்சாட்டு!

ABOUT THE AUTHOR

...view details